கிழவிக்கு பயந்து கொண்டு போகும் பெருமாள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, temple and text that says "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"

கிழவிக்கு பயந்து கொண்டு
போகும் பெருமாள்.
 
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.
 
"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. 
 
அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.
 
அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.
 
உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். 
 
அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.
 
இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள்.
 
 "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.
 
அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். 
 
சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.
 
"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!
 
மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.
 
பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!
 
பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!
இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். 
 
இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.
🙏
ஓம் நமோ நாராயணா நமஹா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
படித்தது பிடித்தது
May be an image of 1 person and temple

 நன்றி இணையம்