ஒருவருடைய தந்தையாருக்கு ஓரிரு நாட்களில் ஸ்ரார்த்தம். ஏதோ ஒரு காரணத்தினால் ஸ்ரார்த்தம் பண்ணி வைக்க வாத்யார் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது என்று கவலையுடன் சென்று கொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங்கரையில் வெள்ளை வெளேரென்று தனது வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார்.
உடனே அவரிடம் ஓடோடி தனது தந்தையின் ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித் தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும் "பேஷா நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று கூறுகிறார்.
என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர் "அன்று சரியாக 11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்க முடியுமா" என்று கேட்க இவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர் ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து சரியாக 11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும் வீட்டின்முன் அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம் செய்யும் குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் சிட்டாக பறந்து விடுகிறார்.
க்ருஹஸ்தருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். "யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை புரோகிதராக கூப்பிட்டு தவறிழைத்து விட்டோமோ?" என்று பயம் அதிகரிக்க அவரைப்பற்றி விஜாரித்ததில் தெரிந்து கொள்கிறார் புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல் திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று.
இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இவர் அங்கம் வகித்தார். அந்த குழுவிற்கு திரு அம்பேத்கர் தலைவராக நியமனைம் செய்யப்பட்டார். இதைப்பற்றி திரு அம்பேத்கர் குறிப்பிடும்பொழுது "என்னைவிட பெரிய, சிறந்த, திரு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரைப்போன்று ஆற்றல்மிக்கவர்கள் இருக்க என்னை தலைவராக நியமனம் செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது" என்று கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசு இவருக்கு "திவான் பகதூர்" மற்றும் "சர்"பட்டம் கொடுத்து கௌரவித்தது
இவருடைய சட்டப் புலமை, வாதத் திறமை அபரிமிதமானது. இதை கௌரவிக்கும் வகையில் இவரைத்தேடி நீதிபதி பதவி வந்தது. ஆனால் இவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவரது வாதத் திறமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
வெள்ளையர் ஆட்சியில் வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரர்களால் கௌரவிக்கப் பட்டவர்களும்தான் குதிரை பூட்டிய சொகுசு கோச் வண்டியில் பிரயாணம் செய்யலாம். மீறினால் சிறை தண்டனை.
இந்த சட்டத்தை மீறி ஒரு ஜமீன்தார் குதிரை வண்டியில் செல்ல அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு திரு அய்யரிடம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற திரு அய்யர் தனது வாதத்தை தொடங்கினார்.
அவர் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே ஜமீன்தார் பயணம் செய்த அந்த வண்டியையும் அதை இழுத்துச்சென்ற மிருகத்தையும் தாங்கள் பார்க்கவேண்டும் என்று வேண்டுகிறேன்" எனறார்.
வண்டியும் குதிரையும் நீதிபதிமுன் ஆஜர்படுத்தப் பட்டது.அதை பார்த்த நீதிபதி "சரி பார்த்துவிட்டேன் இப்பொழுது உங்களது வாதம் என்ன?" என்று வினவினார்.
அடுத்த நிமிடம் திரு அய்யர் அவர்கள் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே சட்டத்தில் ஆண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி(horse driven vehicle) என்றுதான் இருக்கிறதே தவிர பெண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி (mare driven vehicle) என்று இல்லை. தயவு செய்து இந்த வண்டியை இழுத்த மிருகத்தை பார்த்தீர்களானால் தெரியும் அது பெண் குதிரை என்று. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை. ஆகவே ஜமீன்தாரை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றார்
மூச்சு பேச்சற்றுப்போன நீதிபதி ஜமீன்தாரை அடுத்த நிமிடமே விடுவித்தார்.
இந்த வழக்கிற்குப் பிறகுதான் சட்டத்தில் "ஆண்பால் என்பது பெண்பாலையும் குறிக்கும்" என்ற மாற்றம் புகுத்தப்பட்டது .
அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பண்பை என்னவென்று சொல்வது?
14.05.1883 அன்று பிறந்த அந்த மாமேதையின் பிறந்த தினம்.