தர்ப்பைப்புல்லின் மகத்துவம் :
நம்மால் காண முடியாத தீய கதிர்வீச்சுக்களை நமக்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு. மந்திரங்களை தேக்கி வைத்துக் கொள்ளும் சக்தி கொண்டது அது.
வைதீகக் காரியங்களைமேற்கொள்ளும்போது எந்த அமானுஷ்ய இடையூறும் ஏற்பட்டுவிடாதபடி தர்ப்பை காக்கிறது. அதனை மடக்கி, முடிச்சிட்டு பவித்ரமாக அணிந்துகொண்டு, நம்மைச் சுற்றிலும் இரண்டிரண்டாக தர்ப்பையைப் பரப்பி வைத்துக்கொள்வதும் இதற்காகத்தான். தர்ப்பையை அக்கினியின் பிரதிநிதி என்று சொல்வார்கள். ஆதி நாளிலிருந்தே கிரகண காலங்களில் பெரியவர்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் தர்ப்பையை கிள்ளிப் போடுவர்.
கிரகணத்தின்போது தீய கதிர்வீச்சுக்கள் உணவை பாதிக்காத வண்ணம் தர்ப்பை பாதுகாக்கிறது. ஒரு இடிதாங்கிபோல தர்ப்பை செயல்படுகிறது.
பாணிணி என்கிற முனிவர் கௌமுதி என்கிற மாபெரும் நூலை எழுதியபோது பவித்ர பாணியாக விரல்களில் தர்ப்பை பவித்ரத்தை அணிந்து எழுதினார் என்று மகாபாஷ்யம் தெரிவிக்கிறது. அலைபாயும் புத்தியைக் கட்டுப்படுத்தி அதைக் கூர்மையாக்கும் தர்ப்பை, உடல் வலிமையையும் வளர்க்கிறது. காரியத்தை மேற்கொள்ளும்போது நமக்குள்ளிருக்கும் சக்தி பிரவாகமாகப் பொங்கிவர தர்ப்பை உதவுகிறது. நம் சார்பாக காரியங்களை செய்ய புரோகிதருக்கு அதிகாரத்தை மாற்றும்போதும், பெண்கள் பித்ரு காரியங்கள் செய்ய நேரிடும் போதும் மற்றவருக்கு தன் கையாலேயே தர்ப்பையை கொடுக்கலாம் என்று வேதங்கள் வழிமுறைகளை வகுத்திருக்கின்றன.
அதாவது, காரியங்கள் செய்பவர் வேறானாலும் காரிய கர்த்தாவின் அம்சமாக தர்ப்பையே விளங்குகிறது. தர்ப்பை அஸ்திரம் போன்றது. மந்திரங்களை ஏற்றி ஏவினால் ஏவுகணைபோல பாயும் வீர்யம் கொண்டது. ஆலய கும்பாபிஷேகத்தின்போது தர்ப்பை மூலமாக மந்திர சக்திகளை கலசங்களில் ஆவாஹனம் செய்வார்கள்.
அதாவது, ஆண்டாண்டு காலமாக கோயிலின் சாந்நித்தியம் நிலைத்திருக்க இந்த தர்ப்பை உதவுகிறது. அதேபோல பிரம்மோற்சவம் போன்ற கோயில் திருவிழாக்களின் துவக்க கட்டமாக கோயில் கொடிமரத்தில் தர்ப்பையினால் ஆன கொடியை ஏற்றிவிட்டுதான் அடுத்தடுத்த கட்ட இறைப் பணிகளில் இறங்குவார்கள். தர்ப்பைப் பாயில் (தர்ப்பாசனம்) அமர்ந்து தியானம் செய்தால் மிக எளிதில் தியானம் சித்திக்கும்.
சுபகாரியங்களோ அல்லது மற்ற
காரியங்களோ எது செய்ய வேண்டுமானாலும், தர்ப்பை அணிவது இந்துமதத்தின் மரபு. தர்ப்பையை வலதுகை மோதிர விரலில் அணியவேண்டும். இதற்காக தர்ப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின் நுனிப்பகுதிதான் முக்கியமானது. இது மின்காந்தப் பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது. ஒரு டாக்டர் தர்ப்பையை பரிசோதித்தபோது அது அறுபது சதவிகித எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வாங்கிக் கொள்வதைக் கண்டாராம். ஆகவே, தர்ப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது. தர்ப்பை ஒரு வகைப்புல். இதை எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம் என்று எண்ணுவது தவறு. இது தானாக வளர வேண்டும். அனேகமாக இந்தியா முழுவதும் இது விளைகிறது.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் தர்ப்பம் இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் அமாவாசை தர்ப்பணம் போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தர்ப்பம் கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுகின்றது.
அக்னிகுண்டத்துக்கு நாலுபக்கமும் தர்ப்பை வைக்கப்படுகிறது. சுத்தி புண்யாஹவாசன நேரத்தில் கையில் பிடித்துள்ள தர்ப்பையின் நுனி தண்ணீர் பாத்திரத்தில் பட்டு அதிர்வுகளை மந்திர உச்சாடணத்தோடு சேர்ந்து நீக்குகின்றன. தர்ப்பைப்புல்லை எடுப்பதற்கும் சில மந்திரங்கள் உண்டு. பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று
தான் இந்த புல்லை சேகரிக்க வேண்டும். தர்ப்பையைக் கொண்டே வேத காலங்களில்
தவறான அதிர்வலைகளைக்
கட்டுப்படுத்தினார்கள் என்பது இன்றைய
விஞ்ஞான உலகத்திற்கு தெரிய வேண்டிய ஒன்று.
நன்றி இணையம்