ராமபிரான் அவதாரத்தால் பெருமை பெற்ற நவமி திதி......
அயோத்தி மன்னர் தசரதர், நாடு செழிக்க யாகம் செய்ய நினைத்தார். அதன்படி ஒரு வசந்த காலத்தில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். இந்த யாகம் நடக்கும் பொழுது அயோத்தியில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் எவ்விதமான உயர்வு தாழ்வும் இன்றி நல்ல மரியாதை, மதிப்புடன் விருந்தளிக்குமாறு தசரதர் கட்டளையிட்டார். பல தேசத்து அரசர்களும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் தசரத மகாராஜாவை காண வந்தனர். குலகுரு வசிஷ்டர் தலைமையில் யாகம் நடைபெற்றது. பல பண்டிதர்களும் அந்த நேரத்தில் தர்மங்களை பற்றி விவாதம் செய்தனர்.
ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அஸ்வமேத யாக குதிரை, சரயு நதியின் வடக்கு கரையில் அமைந்த யாகசாலைக்கு அருகே வந்து சேர்ந்தது. முதல் நாள் அக்னிஷ்டோமம், இரண்டாம் நாள் உக்த்யம், மூன்றாம் நாள் அதிராத்ரம் என்ற யாகங்கள் கல்ப சூத்திரத்தில் சொல்லியபடி நடைபெற்றன.
இதற்கிடையே தன்னுடய அரியணைக்கு வாரிசு இல்லை என்பதால் கவலை கொண்ட தரசதர், தனது குல குருவான வசிஷ்டரிடம் இதற்கு ஒரு வழி கூறுமாறு கேட்கிறார். அதற்கு வசிஷ்டர், தசரதனுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார். அத்துடன், ரிஷ்ய சிருங்கரை அழைத்து குழந்தை பாக்கியம் அருளும் யாகத்தைச் செய்யுமாறு கூறுகிறார்.
அதன்படி, அஸ்வமேத யாகம் நிறைவடைந்ததும் அந்த யாகத்தை நடத்திய ரிஷ்ய சிருங்கரை அணுகிய தசரத மன்னன், “நான் வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவிக்கிறேன். எங்கள் குலம் தழைக்க, அதற்குரிய யாகத்தை செய்து கொடுங்கள்” என்றார். ரிஷ்ய சிருங்கர் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ரகசியமான `இஷ்டி’ என்ற யாகத்தை செய்து, பின் முறைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகாவிஷ்ணுவை துதி செய்து `பூலோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும்’ என வேண்டிக்கொண்டனர்.
மகாவிஷ்ணு அவர்களிடம் “நான் பதினோறாயிரம் வருஷம் இந்த பூமியில் பிறந்து நாட்டை ஆளப்போகிறேன்” எனக்கூறி, தன்னை நான்கு பாகமாக மாற்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் யாகசாலை வந்து சேர்ந்தார். புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் அக்னியில் இருந்து தேஜஸ்வியான ஒரு பெருத்த உருவம் தோன்றியது. அதன் கையில் தங்க பாத்திரம் ஜொலித்தது. அதில் பால் பாயசம் இருந்தது. அந்த பால் பாயசத்தில் நான்கு பாகமாக மாறிய மகாவிஷ்ணு கலந்தார். தேஜஸ்வியான அந்த உருவம் தசரதரை நோக்கி “இந்த பால் பாயசத்தை உனது பிரியமான மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்” எனக் கூறி மறைந்தது.
தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதம் இருந்த அரை பங்கில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார். பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தார். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்திராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடன ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்கனும் பிறந்தனர்.
பிரம்ம தேவர், ராம பிரானுக்கு உதவுவதற்காக தேவர்களையும், மகரிஷிகளையும், கந்தர்வர்களையும், கருடர்களையும், யட்சர்களையும், நாகர்களையும், கிம்புருஷர்களையும், சித்தர்களையும், வித்யாதரர்களையும், உரகர்களையும், பெரிய உருவங்களுடன் வனத்தில் வசிக்கக்கூடிய வானரர்களாக பிறக்கும்படி செய்தார். இதில் நாம் ராமர் பிறந்த தினத்தை `ராம நவமி’ என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
ஒரு சமயம் அஷ்டமி திதியும், நவமி திதியும் மன வருத்தம் கொண்டன. ‘எல்லா திதிகளும் கொண்டாடப்படுகின்றன. நம்மை மக்கள் யாரும் கொண்டாடவில்லையே’ என எண்ணி, வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட்டன. அதற்கு விஷ்ணு, “நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரமும், நவமி அன்று ராம அவதாரமும் செய்யப்போகிறேன். பிற்காலத்தில் அந்த தினங்களில் உலக மக்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்” என்று வரம் கொடுத்திருந்தார். அதன்படியே கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியை `கோகுலாஷ்டமி’ என்றும், ராமர் பிறந்த நவமி திதியை `ராம நவமி’ என்றும் சிறப்பித்து வழிபடத் தொடங்கினர்.
இந்த ஆண்டு ராம நவமி விழா நாளை (ஏப்ரல் 17) கொண்டாடப்படுகிறது. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும், நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும் என்பது ஐதீகம்.
கர்ப்போத்ஸவம்-ஜனோத்ஸவம்
ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு `கர்ப்போத்ஸவம்’ என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும். ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்து கொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை `ஜனோத்ஸவம்’ என்று கொண்டாடுவார்கள்.