நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே திசையன்விளை, குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன. பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி... ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடியதென்றால் நம்பவா முடிகிறது? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினால், கருப்பட்டிக்காகவே ஓடிய ஒரு ரயிலின் கண்ணீர்க் கதை நம்மை ஆசுவாசப்படுத்தும்...
70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. அந்த ரயிலின் பின்னணி இதுதான்...
சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கும்,
குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாக சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. இந்த தேரிக்காட்டு ரயிலின் பயணம், அந்த கிராமங்களில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க ஆரம்பித்தது...
அந்த ரயில இப்ப நெனச்சாலும் மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு. பிராயத்துல மாட்டு வண்டில தொங்கிட்டு போறதுக்கே நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். பாரி கம்பெனிக்காரன் ரயிலும் அதே வேகத்துலதான் போகும் அதுல ஏறி ஏறி இறங்குறதுன்னா ஏக குஷிதான். நான் பிச்சிவிளை ஸ்டேஷன்ல 6 மாசம் மட்டும் ஸ்டேஷன் மாஸ்டராவே இருந்திருக்கேன். மாசம் 23 ரூவா சம்பளம். அன்னைக்கி அது பெரிய காசு’’ என படுக்கையில் இருந்து எழ முடியாமல் விசும்பினார் 97 வயதாகும் ஜெயமுருகையா.
‘‘இன்னிக்கி நீங்க பார்க்கிற திசையன்விளையே வேற தம்பி. அந்தக் காலத்துல இதே தேரிகாட்ல பயினி (பதநீர்) வாசனை கமகமன்னு தூக்கும். பொழுது விடியறதுக்குள்ளே பயினிய கொண்டாந்து பாரிக்காரன் வச்சிருக்கிற தொட்டியில அளந்து ஊத்திடுவாங்க. தேரிக்காட்டு பயினிய கொண்டு போறதுக்கு அவங்க திசையன்விளைல இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாயே பதிச்சிருந்தாங்க. குழாயில பயினிய ஊத்தி விட்டா சீனி ஆலைக்குப் போய் சேந்துரும். இதே தேரி காட்ல அப்ப 50 பனமரம் இருந்தா போதும், ஆயுசுக்கும் நிம்மதி!’’ என பழங்கால நினைவுகளை அசை போட்டார் திசையன்விளை கருப்பட்டிக் கடை உரிமையாளர் ஜெயராமன்.
பதனீரும், கருப்பட்டியுமே தேரிக்காட்டு ரயிலின் ஆரம்பகால தேடலாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தியதின் பேரில், பின்பு பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அடி அகலம் கொண்ட இந்த ரயில்பாதையில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, உடன்குடி ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் இருந்தன.
‘‘திசையன்விளையில உள்ள எங்க பாட்டி வீட்டுக்கு 2, 3 முறை நான் அதுல போய் வந்திருக்கேன். அப்போ எனக்கு 6 வயசிருக்கும். என் டிரவுசரை கழட்டிட்டுத்தான் எங்கப்பா அந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு. ஏன்னா, அம்மணமா போற சின்ன புள்ளைக்கு டிக்கெட் கெடையாது. கால் துட்டுக்கு அந்த ரயில்ல ஓமப்பொடி கொடுப்பாங்க. அப்படியே நாக்குல எச்சி ஊறும். அந்த ட்ரெயின்ல குடிக்கிறதுக்கு கலரு கேட்டு நா அழுதுருக்கேன்’’ என்னும் கொம்மடிக்கோட்டை சிம்சோனுக்கு இப்போது 83 வயது.
‘‘குலசேகரன்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், ‘பானி’ எனப்படும் களி போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சீனியாக மாற்ற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது’’ எனக் குறிப்பிடுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்.
நன்றி இணையம்