அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:46 | Best Blogger Tips

 


அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்,

மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம்திருவொற்றியூர்,

சென்னை 600019

 

 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.

 

*இதுவே  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என ராஜ வாழ்க்கையை துறந்த பட்டினத்தார்முக்தி அடைந்த தலம்.

 

*திருவெண்காட்டில் வணிகர் குடும்பத்தில் பிறந்து காவிரிப்பூம்பட்டினத்தில்  வணிகத்தில் கொடி கட்டிப் பறந்து குபேரன் போல் வாழ்ந்தவர் பட்டினத்தார்.

 

*இயற்கையில் பிள்ளை இல்லாத அவருக்கு இறையருளால் வந்து சேர்ந்தான் ஒரு வளர்ப்பு மகன். அவனுக்கு மருதவாணன் என பெயரிட்டு மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

 


*வளர்ந்து பெரியவனானதும் அவன் கடல் கடந்து பொருள் சேர்க்கப் போனான். கடல் வாணிபம் முடிந்து கரைசேர்ந்த அவன் கொண்டு வந்த பெட்டியில்  ஓலைகீற்றில் எழுதி இருந்த வாசகம் பட்டினத்தாரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது. அதில் எழுதி இருந்த காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கேஎன்ற வாசகத்தை படித்த மறு கணம் தனது குபேர வாழ்வை துறந்து பட்டுப்பீதாம்பரங்களை விலக்கி கோவணம் உடுத்தி பரதேசி ஆனார். வீடுதோறும் இரந்து உண்ணும் எளிய நிலைக்கு போனார். ஈசன் மீது பற்று கொண்டு பட்டினத்தார் ஆனார்.

 

*தாயின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது மறைவு வரை உள்ளூரிலேயே  வாழ்ந்தார் பட்டினத்தார். ஒருநாள் தாயின் மறைவு செய்தி கேட்டு ஓடோடி வந்தார். சுடுகாட்டில் தாய் உடலின் மேல் வராட்டிகளும் விறகுகளும் அடுக்கி இருப்பது கண்டு பதைபதைத்து அவற்றை அகற்றி விட்டு பச்சை வாழைமட்டைகளை அடுக்கினார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

எனத்தொடங்கி

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

என அவர் பாடிமுடித்த போது பச்சை மட்டை பற்றி எரிந்தது.

 

*அதன் பின் ஊரைவிட்டு பரதேசம் புறப்பட்ட பட்டினத்தார், தமிழகத்தில் உள்ள திருத்தலங்கள் பலவற்றுக்கு சென்று பாடல்கள் பாடி ஈசனை வணங்கினார். வடக்கே உஜ்ஜயினி சென்று ஒரு பிள்ளையார் கோயிலில் தவமிருந்த போது திருடர்கள் அரண்மனையில் திருடிய முத்து மாலை ஒன்றை இருட்டில் பிள்ளையார் கழுத்தில் போடுவதாக கருதி பட்டினத்தார் கழுத்தில் போட்டுவிட்டு போய்விட பின்னால் திருடர்களைத் தேடி வந்த காவலர்கள் பட்டினத்தாரை பிடித்துக் கொண்டுபோய் அரசன் முன் நிறுத்தினர். அரசர் பட்டினத்தாருக்கு மரண தண்டனை அளித்தார்.

 

*தண்டனையை நிறைவேற்ற கழுமரத்தடிக்கு இழுத்து சென்ற போது என்செயலாவது யாதொன்றுமில்லை இனித்தெய்வமே நின்செயலே என்றுணர பெற்றேன்.

எனத்தொடங்கும் பாடலை பாட கழுமரம் தீப்பிடித்து எரிந்தது .அது கண்டு அதிர்ந்த வீரர்கள் மன்னனுக்கு தகவல் சொல்ல மன்னன் வந்து பார்த்து விட்டு பட்டினத்தார் பற்றி அறிந்து தனது அரசர் பதவி துறந்து ஆண்டி கோலம்பூண்டு பட்டினத்தாரின் சீடர் ஆகிவிட்டார். அவர்தான் பத்ரகிரியார்.

 

*பின் இருவருமாக பல்வேறு தலங்களை தரிசித்து விட்டு  திருவிடைமருதூர் வந்து சேர்ந்தனர். அங்குள்ள மகாலிங்க சுவாமி திருக்கோவில் மேற்கு வாசலில் பட்டினத்தாரும் கிழக்கு வாசலில் பத்ரகிரியாரும் இரந்துண்டு வாழ்ந்த காலத்தில் பத்ரகிரியாரிடம் ஒரு நாயும் திருவோடும் இருந்தன .  ஒருநாள் தம்மிடம் யாசகம் கேட்ட ஒருவரிடம் பட்டினத்தார் அடுத்த  வாயிலில் இருக்கும் "சம்சாரியிடம்"  செல்லச்சொன்னார். அதை கேள்விப்பட்ட பத்ரகிரியார் திருவொட்டை நாய் தலையில் போட்டு உடைத்து நாயை கொன்று விட்டு, ஈசனே என்று மகாலிங்க சுவாமி சன்னதிக்குள் ஓடியவர் அப்படியே ஐக்கியமாகி விட்டார்.

 

*சீடனின் முக்தி கண்ட பட்டினத்தார் ஈசனே எனக்கு எப்போது அந்த பேறு என்று கதறிய போதுஎங்கே உனக்கு பேய் கரும்பு இனிக்கிறதோ அங்கே உனக்கு முக்திஎன்று அருளினார் ஈசன்.

 

*அதன் பின் திருவிடைமருதூர் விட்டு புறப்பட்ட பட்டினத்தார், பல தலங்களுக்கும் சென்று விட்டு சென்னையை அடுத்த திருவொற்றியூர் வந்தார். அங்கே கடற்கரை ஓரம் நடந்த போது பேய் கரும்புகள் வளர்ந்து இருப்பதை கண்டு ஒன்றை ஒடித்து கடித்தார். ஆகா என்ன இனிப்பு உள்ளம் மகிழ்ந்தார்.

 

*இதுதான் ஈசன் உரைத்தபடி நமது முக்திக்கான தலம் என்பதை உணர்ந்தார் பட்டினத்தார்.

 

*கடற்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்தார் கொஞ்சம் கடற்கரை மணலை அவர்களிடம் அள்ளி கொடுத்து சாப்பிடுங்கள் சர்க்கரையாய் இனிக்கும் என்றார்.

அது இனித்தது. ஆச்சரியப்பட்ட சிறுவர்கள் அய்யா நீங்கள் யார் என்று கேட்டனர். சொல்கிறேன் என்ற பட்டினத்தார் அருகில் இருந்த வண்ணார் சாலைக் காட்டி , இந்த சாலில் வைத்து என்னை மூடுங்கள் இன்னொரு வேடிக்கை காட்டுகிறேன் என்றார் .

 

*சிறுவர்கள் அவரை உட்கார வைத்து சாலால் மூடினார்கள். சற்று நேரத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்து நடந்து வந்தார். இதென்ன அதிசயம் என வியந்தனர் சிறுவர்கள் . மறுபடியும் மூடுங்கள் என்றார். மூடினார்கள், மீண்டும் வெளியே தூரத்தில் இருந்து நடந்து வந்து ஆச்சரியப்படுத்தினர். சரி இன்னொரு முறை விளையாடலாமா? என்று அமர்ந்தார். சிறுவர்கள் உற்சாகத்துடன் சால் கொண்டு அவரை மூடினார்கள். மீண்டும் அவர் தூரத்தில் இருந்து வருவார் என்று சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆனால் இம்முறை அவர் வரவேயில்லை.

நீண்ட நேரம் காத்திருந்து பார்த்து விட்டு இன்னும் உள்ளே தான் இருக்கிறாரா என்று சாலை திறந்து பார்த்த போது உள்ளே ஒரு சிவலிங்கம் தான் இருந்தது.

 

*சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் விஷயத்தை சொல்லி பெரியவர்களை அழைத்து வந்தனர்.

பின்னர் லிங்கமாகிப் போன பட்டினத்தாருக்கு திருக்கோயில் எழுப்பப்பட்டது. இதை சமாதி திருக்கோயில் என்பது  பொறுத்தமானது அல்ல. ஏன் எனில் பட்டினத்தார் தனது உடலை சிவலிங்கமாக ஆக்கிவிட்டு முக்தி அடைந்தவர்.

 

*கோயில் கட்டுமானங்கள் மாறினாலும் அதே லிங்கம் அதே இடத்தில் அப்படியே இருக்கிறது. இன்றும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறார் பட்டினத்தார்.

 

🙏சிவாயநம



 நன்றி இணையம்