படித்ததில்
பிடித்தது...
மனதை அமைதியாக
வைத்திருப்போம்!
-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள
இந்துமதம்’ நூலிலிருந்து…
பத்தாயிரம்
ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு.
200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி
கண்டவர்களும் உண்டு.
அழுக்கு
வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு.
சலவை
வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்து கொண்டவர்களும் உண்டு.
மனது எந்த ஒன்றை
காண்கிறதோ அப்படியே ஆகி விடுகிறது.
அற்புதம் என்று
அது முடிவு கட்டிவிட்டால், அற்புதமாகவே ஆகிவிடுகிறது.
மோசம் என்று
தோன்றிவிட்டால் மோசமாகவே காட்சியளிக்கிறது.
பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற்கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறுகட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
மாறுதல் மனிதன்
இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி.
“இந்தப் பேரிடியை என்னாலேயே தாங்கவே
முடியாது” என்று சில சமயங்களில் சொல்கிறோம்.
ஆனாலும், நாம் உயிரோடுதான் இருக்கிறோம்.
காரணம் என்ன? மனசு, வேறு வழியில்லாமல் அதை
தாங்கிவிட்டது என்பதே பொருள்.
உலகத்தில் எது
தவிர்க்க முடியாதது?
பிறந்த
வயிற்றையும், உடன் பிறப்புகளையும் தான் மாற்ற
முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்கு உரியதே.
நானே சொல்லி
இருக்கிறேன்… ‘ஜனனத்தையும் மரணத்தையும்’ தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்கு உரியவை என்று.
மனைவியை
மாற்றலாம்; வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்: தொழிலை மாற்றலாம்: எதையும் மாற்றலாம்:
மாறுதலுக்குரிய
உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன?
மனது நம்முடையது:
நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
நமக்கு முன்னால்
வாழ்ந்து செத்தவர்கள் எல்லாம், ஆயுட்காலம் அமைதியாக இருந்து
செத்தவர்கள் அல்ல.
இனி வரப்
போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம்
வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.
“அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட
பிச்சை:
அறியாத
மானிடருக்கு
அக்கரையில் பச்சை”
எந்த துன்பத்திலும்
சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மனதை எளிமையாக
வைத்திருங்கள்.
கவலைகளற்ற ஒரு
நிலையை மேற்கொள்ளுங்கள்.
நிரந்தரமான
நிம்மதிக்கு ஆண்டவனை நாடுங்கள்.
“நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!”
நன்றி இணையம்