மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

 


சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம்தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப் போகும்..

ஆம்!, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறைபொருள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி உறுதி...(மறைபொருள்- இரகசியம்)

வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடைப் பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு கூறு, மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி... (கூறு-அம்சம்)

ஆம்!, தெளிந்த நீரோடை போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளது...

இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது...!

ஆம்!, வாழ்க்கையில் அனைத்தும் எனக்கு குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் அது சாத்தியமில்லை...

காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் உண்மை...

நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக அழிக்கக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான்...


மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலையான மகிழ்ச்சி...

உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்...

ஒரு மலரை உங்களால் மலரச் செய்யமுடியாது. ஆனால்!, அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும்...

மகிழ்வோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நம்மிடமே உள்ளது...

மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது. மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்! மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது...

அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்...

ஆம்!, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடம் கொடுக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்...

வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர், தனித் தீவிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படி இருக்கும் அவருடைய மனநிலை...

அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும்...?

அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே...!?

இதற்கான பொருள், ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இவ்ரண்டும் மட்டும் போதும் என்பதில்லை...

உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்து விட்டால், மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா...!?

அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்...

அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம்...

*ஆம் நண்பர்களே...!*

*நல்ல வாழ்த்துகளைப் பெற்றுத் தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரம்...!*

*அதை அனுபவிக்கப் பழகி விட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும். வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி...!!*

*நம் சிக்கல்களை தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகி விடும்...!!!*

*குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே...!*

*நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது, மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழி நடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது...?*

*பெற்ற சிறிய வெற்றியையும் மனம் மகிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா...? அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே...!*

இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டே இருப்பதாகத்தானே பொருளாகிறது.

 

நன்றி இணையம்