"மரண பயத்தைக் காட்டிட்டியே பரமா"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:02 | Best Blogger Tips

 நம் முயற்சி..

நீண்ட நாட்களாகவே இது குறித்து எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஃபேஸ்புக்கில் மத்திய வயதுடைய தோழர்களின் மரணச் செய்தியைக் கண்ணுறும்போதெல்லாம் இதை எழுதிவிட வேண்டும் என்கிற எண்ணம் மீண்டும், மீண்டும் மேலெழுந்து வரும்.

பள்ளி நாட்களில் நண்பர்களின் அல்லது சொந்தங்களில் உள்ள தாத்தா, பாட்டிகளின் மரணச் செய்திகளைக் கேட்டபோது அவை எந்தவித உளப் பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. கல்லூரிக் காலம் ஆரம்பித்து, முப்பதுகளின் இறுதி வரை நண்பர்களின் பெற்றோரின் மரணச் செய்திகள் லேசாக உள்ளத்தை அசைத்துப் பார்க்கும். உடனடியாக சொந்தப் பெற்றோரின் உடல் நலக் குறைபாடுகள் கண்முன்னால் வந்து போகும். காரணமின்றி அவர்களை அழைத்து சும்மாவேணும் உரையாடத் தோன்றும்.

முப்பதுகளின் மத்திமப் பகுதியிலிருந்தே சம வயதுடையவர்களின், நண்பர்களின், நண்பர்களுடைய நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணச் செய்திகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட, மத்திம வயதுடையவர்களின் மரணத்திற்கு சாலை விபத்துகள் ஒரு முக்கியக் காரணமாக இருந்தன.

ஆனால் சமீக காலங்களில், மாரடைப்பு, புற்று நோய் உள்ளிட்ட பிற நோய்களால் நிகழும் நண்பர்களின் திடீர் மரணங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணச் செய்திகளைக் கேள்விப்பட நேர்ந்தது.

தத்துவார்த்த ரீதியாக வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசியெல்லாம் ஜல்லியடிக்க விரும்பவில்லை. மாறாக நடை முறையில் பலனளிக்கக்கூடிய சில முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக்கொள்வதே சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன்.

முதலாவது குடும்பத்திற்கான ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ். "நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கான மருத்துவச் செலவுகளை என் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்" என்று சொல்பவர்களும் கூட தனியாக வேறொரு பாலிஸி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. எந்த நேரம் முகத்தில் 'பிங்க் ஸ்லிப்' ஒட்டப்படும் என்பது தெரியாத காலகட்டம் இது.

இரண்டாவது குறைந்தது ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான டெர்ம் இன்ஷ்யூரன்ஸ். இதைப்பற்றி விளக்க அவசியமில்லை என நினைக்கிறேன்.

மூன்றாவது வாங்கியிருக்கும் கடன்களுக்கான காப்பீடு. இது மிக அவசியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குடும்பத்திற்கு சொத்தை விட்டுச் செல்லலாம். கடன்களை அல்ல.

மேலும் வாங்கிய கடன்கள், வர வேண்டிய தொகைகள் குறித்த ஆவணங்கள், விவரங்களைக் குடும்பத்தில் உள்ளோரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மறைந்தபோது, அவருக்குக் கடன் கொடுத்தவர்களெல்லாம் வரிசையில் வந்தார்கள். அவருக்குப் பணம் தர வேண்டியவர்களோ காற்றில் கரைந்திருந்தார்கள்.

உங்களது குழந்தைகளை, உங்களுக்கு அகால மரணம் சம்பவிக்குமானால் யார் வளர்ப்பது என்பதைக் கூட நாம் நன்றாக இருக்கும்போதே குடும்பத்தில் உள்ள அனைவரது முன்னிலையிலும் பேசி, ஒரு முடிவெடுத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். சமீபத்தில் கணவன், மனைவி இருவரும் சாலை விபத்தில் பலியாகிவிட, பள்ளியிலிருந்து திரும்பிய இரு குழந்தைகள் வீட்டுச் சாவி கூட இல்லாமல் தெருவில் நின்ற கதையைக் கேள்விப்பட்டதிலிருந்து எடுத்த முடிவு இது. இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுவதற்கு இருக்கும் மனத்தடைகளை உடைத்தெறிவது நல்லது. "அது முடியாது, அவசியமில்லை" என்போர் அந்தக் குழந்தைகளின் இடத்தில் அவரவர் குழந்தைகளை ஒரு ஐந்து நிமிடம் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்குகள், பாலிஸிகள் இதர முதலீடுகளில் "நாமினி" பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் இறந்தவுடன் அவரது டெபிட் கார்ட் பின் நம்பர் நமக்குத் தெரிந்தால் கூட அதைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது வங்கி விதிகளின் படி தவறு என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. நிறையப் பேர் தவறவிடும் விஷயம் இது.

முடிந்த அளவுக்கு சீரான உணவுப்பழக்கம், உடல் நலத்துக்கு வேட்டு வைக்கும் கெட்ட பழக்கங்களைக் குறைத்துக் கொள்வது, குறைந்த பட்சமாவது உடற்பயிற்சி, சின்னப் பிரச்சனைகளுக்குக் கூட மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பது என்று ஆரோக்கிய வாழ்வியல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான அத்தியாவசியமான காலம் இது.

உங்கள் காலத்திற்குப் பிறகு உங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தான உங்களது கனவுகளை நிறைவேற்ற இவர்கள் துணை செய்வார்கள் என்று இரண்டு மூன்று பேரையாவது தேர்வு செய்து அதை அவர்களிடமும் சொல்லிவிடுங்கள். அது நடக்கும், நடக்காது என்பது வேறு விஷயம்.

மிக முக்கியமான ஒரு விஷயம் மனைவி, குழந்தைகளை (அவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும்) பொருளாதாரத்திலும், பிற விஷயங்களிலும் தனித்தியங்க அனுமதிப்பது, அதற்கான வெளியை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது. தனது ஜட்டி என்ன சைஸ் என்று தெரியாத கணவர்களையும் பார்த்திருக்கிறேன். கணவர் இறந்த பின்பு முதல் முறையாக காய்கறிக் கடைக்குச் சென்று "சட்னி அரைக்க பச்சை மிளகாய் ஒரு அஞ்சு கிலோ கொடுங்க" என்று கேட்ட, உலகறியாமல் வளர்ந்த மனைவியையும் பார்த்திருக்கிறேன்.

மரண பயத்தை வெல்வது எப்படி ?

கடைசியாக ஒன்று... அது லெகஸி. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களது குடும்பம், வியாபாரம், கலை, இலக்கியம், தனிப்பட்ட தேர்வுகள் ஆகியவற்றை, உங்களது காலத்திற்குப் பிறகு இவர்களால் முன்னெடுத்துச் செல்லமுடியும் என நீங்கள் நம்பும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் போதிய வாய்ப்புகளையும், பயிற்சிகளையும் அளித்து வளர்த்தெடுங்கள். உங்கள் பேர் சொல்ல நிலைத்திருக்கப் போவது அவைதான்.

மேலே சொன்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் தனித்தனியாகக் கட்டுரைகளே எழுதலாம். "நீ எல்லாவற்றையும் செய்துவிட்டாயா?" என்று எதிர்க்கேள்வி கேட்காதீர்கள். பாதி செய்திருக்கிறேன். மீதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.

இவை குறித்து மாற்றுக் கருத்துகளும், இவற்றை விடச் சிறந்த மாற்றுகளும் இருக்கலாம். அவரவர்க்கு அவரவர் வசதி. ஆனால் நான் சொல்லியிருப்பவை அடிப்படையான விஷயங்கள், அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். தேவைக்கும் அதிகமாகவே வசதியானவர். மனைவி, மக்களை அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழக அனுமதிக்க மாட்டார். ஆனாலும் கூட "நான் இறந்து போய்விட்டால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, நீயும் செத்துப் போய்விட வேண்டும்" என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறாராம். கேட்டபோது எனக்கு திகிலாக இருந்தது. அதீத அன்பா அல்லது தான் இல்லாமல் தனது குடும்பம் சர்வைவ் ஆக முடியுமா என்கிற சந்தேகமா என்று தெரியவில்லை.

ஆனால், மேலே சொன்ன விஷயங்களைச் செய்யாமல் நமது குடும்பத்தை அந்தரத்தில் விட்டுச் சென்றோமேயானால், நம் குடும்பத்தினரையும் அந்த மாதிரியான முடிவெடுக்கும் நிலையில்தான் விட்டுச் செல்வோம் என்பது நினைவிருக்கட்டும்.

"மரண பயத்தைக் காட்டிட்டியே பரமா" என்று யோசிக்காதீர்கள். மரணம் ஒன்றுதான் என்றென்றைக்கும் நிலையானது. ஆனால் அது எப்போது நடக்கும் என்கிற பரமபத விளையாட்டின் மாய விதிகளில்தான் வாழ்வின் சுவாரஸ்யம் மறைந்து கிடக்கிறது.

 

நன்றி இணையம்