இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips


இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் தோவல்!
அயன் பிளமிங் என்கிற ஆங்கில எழுத்தாளரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட்!

இவர் சிறந்த உளவாளியாக பணியாற்றி பல்வேறு வழக்குகளை துப்பறிந்து உண்மையை கண்டுபிடிப்பார். இந்த கதைகளைப் படிக்கும் வாசகர்கள் ஜேம்ஸ் பாண்ட் ஒரு உண்மையான மனிதர் என்றே நம்புவர்!
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இந்தியாவில் உண்மையாகவே காணலாம். இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டாக திகழ்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 75. கேரளாவிலிருந்து 1968 ஆண்டு .பி.எஸ்.சில் தேர்வான தோவல் கேரளா காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.

தலசேரியில் 1971ல் இனக் கலவரம் ஏற்பட்டது. இதை அடக்க இளம் .பி.எஸ். அதிகாரியான தோவலை காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய கேரள முதல்வர் கருணாகரன் அனுப்பினார். தனது சீரிய பணியால் தலசேரியில் ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கி இரு சமூகத்தினரிடமும் அமைதியை ஏற்படுத்தினார்.
மாநில பணியில் சிறப்பாக செயல்பட்ட தோவல் 1970களில் மத்திய அரசு பணியில் சேர்ந்தார். அவர் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் ஆக உருவானதும் அப்போது தான்.கடந்த 1999ல் காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்திய மூவரில் தோவலும் ஒருவர்.அத்துடன் 1971 - 1999 வரை நடந்த 15 விமான கடத்தல் சம்பவங்களிலும் விமானம் மற்றும் பயணியர் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர் தோவல். .பி. எனப்படும் மத்திய உளவுத் துறையின் 'ஆபரேஷன்' பிரிவு தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
கடந்த 1980களின் இறுதியில் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் தனி நாடு கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு சார்பில் மிசோரமுக்கு அஜித் தோவல் அனுப்பப்பட்டார். மிசோ தேசிய முன்னணியின் தலைவர் லால்டெங்காவின் நெருங்கிய கமாண்டர்கள் ஆறு பேரை அவருக்கு எதிராக திருப்பினார். மேலும் மிசோ தேசிய படையில் ஊடுருவி மியான்மர் மற்றும் சீன எல்லையில் பணியாற்றி பயங்கரவாதிகள் பற்றிய தகவல்கள் செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தினார்.

மிசோரமில் அமைதியை ஏற்படுத்திய பின் சிக்கிம் சென்ற தோவல் அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றினார். நாட்டின் மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் தான் தோவலின் குரு.அவரது மேற்பார்வையில் தான் தோவல் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பயிற்சியை பெற்றார். பாகிஸ்தான் துாதரகத்தில் வணிக பிரிவின் தலைவராக சில காலம் பணியாற்றினார். இதில் பெரிய பணிகள் எதுவும் இல்லாததால் பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களையும் காலிஸ்தான் பயங்கரவாதிகளையும் கண்காணித்தார்.காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் செய்து வரும் உதவிகள் பற்றியும் அறிந்தார். பாகிஸ்தானிலிருந்து திரும்பிய தோவல் பஞ்சாபில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 1988ல் அமிர்தசரஸ் பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் பிளாக் தண்டர்' நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தார்.அதற்கு முன் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ரோமானியா நாட்டு துாதர் லிவி ராடுவை பாதுகாப்பாக மீட்டதில் தோவலுக்கு பெரும் பங்கு உண்டு.ஜம்மு - காஷ்மீரில் 1990களில் பயங்கரவாதம் தன் கோர முகத்தை வெளிப்படுத்தியது. அந்த சமயத்தில் தோவல். ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பப்பட்டார்.முக்கிய பயங்கரவாதி குக்கா பர்ரேவின் மனதை மாற்றி அவரையும் அவரது ஆதரவாளர்களையும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தார். இதனால் தான் 1996ல் ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

தோவலின் செயல்பாடுகளை அவரது உயர் அதிகாரிகள் பலர் ஆதரிக்கவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகள் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்து அவரது திறமையை பாராட்டினர். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான .மு. கூட்டணி ஆட்சியில் இருந்த போது 2004ல் உளவுத் துறையின் இயக்குனராக தோவல் நியமிக்கப்பட்டார். பின் 2009ல் ஓய்வு பெற்றார்.ஓய்வுக்குப் பின் விவேகானந்தா கேந்திரா சார்பில் துவக்கப்பட்ட 'விவேகானந்தா பவுண்டேஷனின்' தலைவராக பொறுப்பேற்றார். இந்த அமைப்பு மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதித்து தீர்வு கூறும் அமைப்பு. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் பின்னணியில் தீவிரமாக செயல்பட்டவர் அஜித் தோவல்.

மத்தியில் 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான தே.., கூட்டணி அரசு பதவியேற்றது. விவேகானந்தா பவுண்டேஷனில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது மோடிக்கு பெரும் நம்பிக்கையிருந்தது. மோடியின் முதன்மை செயலராக பணியாற்றிய நிருபேந்திர மிஸ்ரா விவேகானந்தா பவுண்டேஷனில் இருந்தவர் தான். தோவலின் திறமை அப்பழுக்கற்ற செயல்பாடு ஆகியற்றால் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மோடி நியமித்தார்.கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்பணியிலும், தோவல் சாதனைகள் படைத்துள்ளார். மேற்காசிய நாடான ஈராக்கில் 2014 ல் .எஸ்., பயங்கரவாதிகளில் பிடியில் சிக்கியிருந்த கேரள நர்ஸ்கள் 46 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு தோவலின் செயல்பாடுகள் தான் காரணம். மியான்மர் எல்லையில் 2015ல் செயல்பட்டு வந்த பிரிவினைவாத அமைப்பான தேசிய நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12க்கும் அதிகமான பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்

தோவலின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கதேச போருக்கு பின், பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய அரசு உள்நாட்டில் மட்டும்தான் நடவடிக்கை எடுத்துவந்தது. பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கையை மாற்றியவர் தோவல். கடந்த 2016 ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா மேற்கொண்ட முதல் 'சர்ஜிகல் ஸ்டிரைக்'கிற்கு தோவல் தான் காரணம் என சொல்லத் தேவையில்லை

சீனாவுடன் டோக்லாம் எல்லையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சுமூக தீர்வு கண்டதில் அப்போதைய வெளியுறவு செயலர் ஜெய்சங்கருடன் தோவல் முக்கிய பங்காற்றினார்.கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்கதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லையில், இரண்டாவது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தோவல் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதையடுத்து தான் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டார்.
அவருக்கு மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் டில்லியில் நடந்தபோராட்டத்தில் கலவரம் வெடித்தது.கலவரத்தை அடக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனுப்பாமல், தோவலை தான் மோடி அனுப்பினார்

தோவல்மேற்கொண்ட நடவடிக்கையால் டில்லியில் அமைதி திரும்பியது.அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த 22 தீவிரவாதிகளை மியான்மர் இந்தியாவிடம் கடந்த மே மாதம் ஒப்படைத்தது. இது தோவல் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்பட்டது.சமீபத்தில், லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதன்பின் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் தோவல் தொடர்ந்து பேசினார். அதன்பலனாக லடாக் எல்லையிலிருந்து சீன படைகள்வாபஸ் பெற்றது. இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பணிகள் மிகவும் சவால்கள் நிறைந்தவை. ஆனால், அவற்றை தோவல் மிக திறமையாக கையாண்டு சாதனை படைத்து வருகிறார்.

இளம் வயதில் விருது
சிறப்பாக பணியாற்றியதற்காக மிக இளம் வயதில் போலீஸ் பதக்கம் பெற்றவர் தோவல். போலீஸ் பணியில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இந்த பதக்கத்தை அவர் பெற்றார். பின் ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.ராணுவ அதிகாரிகளின் வீர தீர செயல்களை பாராட்டி 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வீர தீர செயல் புரிந்த காவல் துறையினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.இந்த கீர்த்தி சக்ரா விருதை பெற்ற முதல் போலீஸ் அதிகாரி தோவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி இணையம்