சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து
கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி,
"உலகப்
பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல்,
கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல்,
பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான்
ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்"
எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.
என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும்
கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?
அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம்.
நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.
வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன
செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப்
போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?"
இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில
நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.
சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு
வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக்
காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.
இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக்
காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு
முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு
துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக்
கண்டுபிடித்து விட்டார்.
வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ
துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான்
நிர்ணயிக்கும்.