பாரம்பரிய உணவு முறை அவசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips
Image result for பாரம்பரிய உணவு முறை அவசியம்

வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.
மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.
மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.
இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.
Image result for பாரம்பரிய உணவு முறை அவசியம்
மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.
அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது.
துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.
பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.
கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.
காலையில் நீராகாரத்தை உண்டனர்.
Related image
தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.
மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.
உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.
பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.
உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.
இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.
நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.
அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.
இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.
இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.
அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.
பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.
இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.
அடுத்து மோர் சாதம்.
இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.
அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.
பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறோம் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாமும் இனி திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களை கையாள வேண்டும் என்று உறுதி கொள்வோம்.
"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"


நன்றி இணையம்