ஆங்கிலத்தில் commitment
என்றொரு சொல் உண்டு.
ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று
தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது
முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன்
பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்;
இல்லையெனில் 'என் வழி தனி
வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது
இரண்டுங்கெட்டான் வழி.
ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit
ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது.
‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ சீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.
“இந்தக் காரியத்தில்
நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி
செய்து முடிக்கப் போகிறேன்”
என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில்
ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு
மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம்
எதிர்கொள்ளும் விதமே தனி.
ஏனெனில் -
“எப்படியும் இந்த
ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது செயல்பாடுகளெல்லாம்
அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று
அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை
தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்”
என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!
இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால்
மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.
இவ்விதி, அலுவலகமாகட்டும் தொழிலாகட்டும் அனைத்திற்கும் பொது.
ஆக,
எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும்
ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*