ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது !
இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே, பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம்.
பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.
பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*