எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் ''கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி'' அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும்.
அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும்.
''ஆடிச்
செவ்வாய் தேடிக்குளி'' என்றும், ''ஆடிப்பட்டம் தேடி விதை'', ''ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்'' என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
ஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.
ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ''அருளோடு வரும் பொருள் தான்'' என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் லட்சுமி என்றும், திருமகள் என்றும் வர்ணிக்கின்றோம். எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடியே வாழ்க்கையை திட்டமிட்டநடத்த இயலும்.
அங்ஙனம் வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ''திருமகளே வருக'' என்று கோல மாவினால் எழுதலாம்.
பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும்.
அன்றாட வாழ்க்கையின் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ?
இன்றோடு துயர்விலக, இனிய தனலட்சுமியே!
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்று பாடுங்கள்.
லட்சுமி இல்லம் தேடி வருவாள்.
ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.
நன்றி இணையம்