காமாலையை விரட்டும் கிராமம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:16 | Best Blogger Tips


நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி போகும் வழியில் இருக்கிறது பரவை. காலை நேரத்தில் வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் எல்லாப் பேருந்துகளும் பரவை யில் நின்று செல்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். ஊருக்குள் நுழைந்தால், தெருவுக்கு ஒரு வீட்டிலாவது 'காமாலை மருந்து கொடுக்கப்படும்’ என்று போர்டு இருக்கிறது. குறைந்தது 10 நோயாளிகளாவது மருந்து சாப்பிட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மாயகிருஷ்ணனின் வீடு, நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. வந்தவர்களை அழைத்து முதலில் கையை நீட்டச் சொல்லி விரலைப் பிடித்து அழுத்திப் பார்க்கிறார். ''ஒண்ணுக்கு போகும்போது எரிச்சல் ஆக இருக்கிறதா? மஞ்ச ளாகப் போகிறதா?'' என்று ஓரிரு கேள்விகளைக் கேட்கிறார். காமாலையின் ரகத்தை முடிவு செய்வது இந்தக் கேள்விகள்தானாம்.

''சும்மா இல்லைங்க... நாம காமாலைனு பொதுவா சொல்லிட்டாலும், அதில் மஞ்சக் காமாலை, பித்தக் காமாலை, ஊது காமாலை, அந்திக் காமாலை, ரத்தக் காமாலை, வெட்டக் காமாலை, வாதக் காமாலைனு 18 வகைக் காமாலைகள் இருக்கு. வர்றவங்க கண்ணு, கை பார்த்தாலே, எந்தக் காமாலைனு தெரிஞ்சுடும். பிறகு அந்தக் காமாலைதானானு உறுதி செஞ்சுக்கத்தான் கேள்வி!'' என்கிறார் மாயகிருஷ்ணன்.

ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை என்று எந்த டெஸ்ட்டுக்கும் இங்கு வேலை இல்லை. கண் பார்க்க, கை மருந்து கொடுக் கிறது. மருந்து என்றால் கசாயமோ, பொடியோ, லேகியமோ, மாத்திரையோ இல்லை. இரண்டு கிண்ணம் பொங்கல்தான் மருந்து. காமாலை கண்டவர்கள் மாயகிருஷ்ணன் தரும் இரண்டு கிண்ணம் பொங்கலையும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான்.

பாலில் அரிசி கலந்து உப்பு இல்லாமல் செய்யப்படும் பொங்கல் அது. காமாலைக்கு உண்டான பச்சிலையைத் துண்டுத் துண்டாக வெட்டி அந்தப் பொங்கலில் போட்டு இருக்கி றார்கள். அவ்வளவுதான். சாப்பிட்ட இரண்டு கிண்ணம் போக, கையில் பார்சல் ஒரு கிண்ணம் தரப்படுகிறது. அதை நான்கு மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். அவ்வளவு தான். மருந்து இவ்வளவுதான் என்றாலும் 10 நாள் வரை சில பொருட்களை சாப்பிடக் கூடாது, சிலவற்றைக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று ஒரு பத்திய முறையை அச்சடித்துக் கையில் கொடுத்துவிடுகிறார். அவற்றைக் கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட காமாலையும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுமாம்.

''வெட்டக் காமாலை, ரத்தக் காமாலை, வாதக் காமாலை... இவை எல்லாம் காமாலைனு தெரியாமலேதான் ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பார்த்துக்கிறாங்க. இந்தப் பச்சிலை ஒரே வாரத்தில் எல்லாக் காமாலையையும் குண மாக்கிவிடும். பாதிக்கப்பட்டவங்க பொங்கல் சாப்பிடும் அளவுக்குத் தெம்பாக இருந்தால் போதும், அவர்களை நிச்சயம் குணமாக்கிவிடலாம்'' என்கிறார் கணவர் மாயகிருஷ்ணனுக்கு வைத் தியத்தில் உதவிகரமாக இருக்கும் அவருடைய மனைவி அஞ்சம்மாள்.

150 வருடங்களுக்கு முன்பு மாயகிருஷ்ணனின் தாத்தா சந்திரகவுண்டர்தான் இந்தப் பச்சிலை வைத்தியத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவருக்குப் பின் அவருடைய மகன் வீரப்ப கவுண்டர், இப்போது அவருடைய மகன் மாய கிருஷ்ணன் என்று வழி வழியாகத் தொடருகிறது. முன்பு எல்லாம் நோயாளிகள் வரும்போதே, ஒரு லிட்டர் பாலும், கால் படி அரிசியும் கொண்டு வர வேண்டும். அந்தப் பாலில் அரிசியைப் போட்டு பச்சிலை சேர்த்து வேகவைத்து இரண்டு கொட்டாங்குச்சி அகப்பை பொங்கலை நோயாளி தைத்துவைத்து இருக்கும் தையல் இலையில் போடுவார்கள். அதைச் சாப்பிட்டதும் அங்கேயே இருக்கவைத்து நான்கு மணி நேரம் கழித்து, இன்னும் இரண்டு அகப்பைப் பொங்கல் கொடுப்பார்கள். ஆனால், இப்போது அரிசியை மாவாக்கி பாலில்வைத்து மொத்தமாக 100 பேருக்கான அளவில் பொங்கல் தயாரித்து விடு கிறார்கள். இவ்வளவு என்று விலை நிர்ணயம் இல்லை. மூன்று பொங்கலுக்குமாகச் சேர்த்து 50 கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார், 100 கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார். மருந்து சாப்பிட்டவர்கள், ஒரு வாரம் கழித்து வந்து அவரிடம் காட்டி காமாலை சரியாகிவிட்டதை உறுதி செய்து கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மருந்து வாங்கிச் சாப்பிட்டவர்கள், 50-ல் தனக்குக் குணமானதை நம்ப முடியாமல் வியந்து திரும்பு கிறார்கள்.

குடல் ஏற்றம் தெரியாமல் கோடி ரூபாய் செலவழிக்கும் காலத்தில், பரவை... நிச்சயம் ஓர் அதிசய கிராமம்தான்!

- கரு.முத்து