இன்று கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:33 PM | Best Blogger Tips
இன்று கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாள். இவர் வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில், ஆக., 25, 1906ல் பிறந்தார் வாரியார். இவரது பெற்றோரின், 11 குழந்தைகளில், இவர் நான்காமவர். பள்ளிக்கு செல்வதற்கு பதில், மூன்றாவது வயது முதல், தந்தையை குருவாக ஏற்று, அவரிடம் சகலமும் கற்று தேர்ந்தார்.

தன் 19வது வயதில், தாய்மாமன் மகளை மணந்தார். ஆனால், குழந்தை பாக்கியம் இல்லை. தந்தையார் சொற்பொழிவு ஆற்ற, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வாரியாரையும் அழைத்துச் சென்று, புராண பிரசங்கத்தில் பங்கு பெற வைத்தார். காலப்போக்கில், வாரியார் நிகழ்ச்சிகளுக்கு, வயது வித்தியாசமின்றி மக்கள் திரண்டனர்.

ஆண்டு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பக்தி சொற்பொழிவு ஆற்றி, அதன் மூலம் நன்கொடை வசூலித்து, பல கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள் நடத்தினார். இவரது உதவியால் படித்த பல ஏழை மாணவர்கள், பெரும் பதவிகளிலும், பெரிய பொறுப்பிலும் உள்ளனர்.

ஒரு முறை வாரியாரை பத்திரிகைக்காக பேட்டி எடுக்க விரும்பி, மதுரை நவபத்கானா தெருவில் வாரியார் தங்கியிருந்த வீட்டிற்கு கேமரா, டேப்ரிகார்டருடன் காலையிலேயே, என் நண்பர் கோபுவையும் அழைத்துச் சென்றேன்.

வாரியாரின் நண்பர், சுந்தரமகாலிங்கம் என்பவரிடம், வந்த விஷயத்தை கூறினோம். அவர், "சுவாமிகள் பூஜை செய்ய அமர்ந்து விட்டார், ஒரு மணி நேரமாவது ஆகும். பூஜை முடிந்த பின், பேட்டி தருவார். அதுவரை, வேறு வேலை இருந்தால் முடித்துவிட்டு வாருங்கள் அல்லது பூஜையில் நீங்களும் கலந்து கொள்வதென்றாலும் ஆட்சேபணை இல்லை...' என்றார்.

கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, பூஜை அறைக்கு சென்றோம். அவரைப் பார்த்ததும், "நமஸ்காரம்' என்றேன். அவரும், "நல்லாயிரு தம்பி...' என வாழ்த்தினார்.

ஒரு அலமாரி போன்று, இரு கதவுகள் கொண்ட பெட்டி, அதற்குள் அழகான முருகன் விக்கிரகம் இருந்தது. அதை கீழே இறக்கி வைத்து, அதன் மேல் பக்தர்கள் கொடுத்த இளநீர், பால், விபூதியால் அபிஷேகம் செய்து, திருப்புகழ் பாடியவாறு, ஒரு மணிநேரத்திற்குப் பின், இறுதியாக கற்பூரம் காண்பித்து, எங்களுக்கு விபூதி வழங்கினார்.

எங்கு சென்றாலும், அந்த விக்கிரகம் உள்ள பெட்டியை, கூடவே எடுத்துச் சென்று, தங்குமிடத்தில் வைத்து, பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பூஜை முடிந்ததும் அவரிடம், "சரி சுவாமி பேட்டிக்கு செல்லலாமா?' என்றேன். அவர், "நீங்கள் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டார். நேரமின்மையால், சாப்பிடாமலே சென்று விட்டோம். இதை எப்படி சொல்வது என யோசிக்கையில், அவரே, "வாங்க என்னுடன் அமர்ந்து ஏதாவது சாப்பிடுங்கள், பிறகு பேட்டி...' என்றார். அவருடன் சாப்பிட அமர்ந்தோம்.

காலை சிற்றுண்டி, கோவில் பிரசாதம் போன்று, நம் டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத அயிட்டமாக இருந்தது. இருப்பினும், அதை காட்டிக் கொள்ளாமல், டிபனை முடித்தோம். உணவு விஷயத்தில், வாரியார் மிகவும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருந்தார். அவரது ஆரோக்கியத்திற்கு, இதுவும் ஒரு காரணம் எனலாம்.

"சரிப்பா... ஏதோ பேட்டின்னியே, கேளுப்பா...' என்றார். நான் டேப்ரிகார்டரை ஆன் செய்து, அவரிடம், சராசரி மனிதனுக்கு, ஆன்மிக விஷயத்தில் என்ன சந்தேகம் வருமோ, அதையே தான் கேட்டேன்.

"மனித குலத்தில், ஜாதி என்பது எப்படி வந்தது? மகாபாரதம், ராமாயணம் வெறும் கதையா உண்மையிலேயே நடந்ததா?' என்றெல்லாம் கேட்டேன். கடவுள் இல்லையென்று கிண்டல் செய்பவர்களை பற்றி குறிப்பிடும் போது, அவர், "இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, அந்த காலத்திலேயே இரணியன் இருந்தாரில்லே கேள்விப்படலையா?' என்று திருப்பிக் கேட்டார்.

பேட்டியின் போது, வாரியார், எல்லா கேள்விக்கும் சிரித்துக் கொண்டே பதில் கூறினார். மேடையில் சிம்ம கர்ஜனை போன்று, உரத்த குரலில் கதை சொல்லும் அவர், நேரில் பேசும் போது, மெதுவான குரலில் தான் பேசினார்.

அத்தனைக்கும் மேலாக, சில மதத் தலைவர்கள் உணவருந்தும் போது, யாரையும் அனுமதிப்பதில்லை; இவர், விதிவிலக்கு எனலாம். விருந்தினர்களை அருகே அமர வைத்து, வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் நடத்திய வாரியார், உண்மையிலேயே மதிக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.

வாரியாரின் சொற்பொழிவில் கிடைத்த சில துணுக்கு செய்திகள்...
--------------------------------------------------------------------------------------

*வரவர நாட்டில் நல்லவர்கள் மிக குறைந்து வருகின்றனர். ஏன்... அன்றே பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள், 100 பேர். 100க்கு, ஐந்து பேர் தான் நல்லவர் இருந்திருக்கின்றனர்.

*யாராயிருந்தாலும், பதவியில் இருந்தால் தான், பிறந்த நாள் விழா, பாராட்டு எல்லாம். பதவி போய் விட்டால், அதோடு விழா எல்லாம் மறைந்து விடும். (இது இந்த கால அரசியல் தலைவருக்கும் பொருந்தும்.) தருமன் பதவியில் இல்லாத போது, யாரும் எந்த விழாவும் எடுக்க முன்வரவில்லை.

*முதன்முதலாக கூட்டணியை கண்டு பிடித்தவர் பெருமாள்தான். எப்படியென்றால், நரனுக்கு அறிவு அதிகம்; சிங்கத்திற்கு ஆற்றல் அதிகம். இவை இரண்டு சேர்ந்த, நரசிம்ம அவதாரம் எடுத்து தானே, இரணியனை கொன்றான்.

*வீட்டில் சாப்பிடுவது சாதம்; கோவிலில் கொடுத்து சாப்பிட்டால் அது பிரசாதம்.

*ராமர் கானகம் போனபோது, மகன் பிரிவை தாளாது மாண்டார், தந்தை தசரதர். ராமரை சுமந்து பெற்ற தாயார் கோசலை, மாளவில்லை. ஏன்? மகன்மேல் ஆசை வைத்தார் தசரதர்; அன்பு வைத்தாள் கோசலை. ஆசை, மனிதனை மாள வைக்கும்; அன்பு, வாழ வைக்கும். இது தான், இரண்டிற்கும் வித்தியாசம்.


Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை