எலித் தொல்லையா? முதல்ல இத படிங்கப்பா..

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:52 | Best Blogger Tips



நிறைய பேருக்கு செல்லப் பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அந்த செல்லப் பிராணிகள் பல்வேறு சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும். அத்தகைய செல்லப் பிராணிகளில் நாய், பூனை, கிளி போன்றவற்றை தான் பெரும்பாலானோர் வளர்ப்பார்கள். சிலர் எலிகளில் வெள்ளை நிற எலியை வளர்ப்பார்கள். ஆனால் அந்த வகைகளில் ஒன்றான கருப்பு நிற எலியைக் கண்டால் பலரும் எரிச்சல் அடைவார்கள். ஏனெனில் கருப்பு நிற எலியின் அட்டகாசத்தை தாங்கவே முடியாது. குறிப்பாக பெருச்சாளி என்றால் அனைவரும் அது மட்டும் கையில் கிடைத்தால், அதனை அடித்தே சாவடிப்பேன் என்ற அளவில் கோபப்படுவார்கள். ஏனென்றால், அவை வீட்டில் உள்ள மரத்தாலான நாற்காலி, உடைகள் போன்றவற்றை கிழித்து வைத்துவிடும். பொதுவாக இந்த மாதிரியான எலிகளின் இருப்பிடம் வீட்டின் தோட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு நாம் குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர குப்பைகளை போடுவதால், அதன் வாசனைக்கு அது பொந்து போட்டு, தங்கி, வீட்டின் உள்ளே வந்து வீட்டையே அசிங்கமாக்கிவிடுகிறது. எனவே வீட்டையும், தோட்டத்தையும் எலிப் பிரச்சனையின்றி வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* முதலில் குப்பைத் தொட்டியை வீட்டின் வெளியே தோட்டத்தில் வைத்தால், அவற்றை நன்கு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் வாசனைக்கு எலிகள் எளிதில் வந்துவிடும். எனவே குப்பைத் தொட்டியை நன்கு மூடி வைக்க வேண்டும். மேலும் குப்பையை வெளியே எறிந்த பின்னர், அதனை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

* மரத்தூள் குவியல் மற்றும் தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதன் வாசனையால் எளிதில் எலியானது வந்துவிடும்.

* வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை களிமண் அல்லது கம் வைத்து நன்கு அடைத்துவிட வேண்டும். இதனால் எலிகள் வீட்டில் வந்து விளையாடுவதை தடுக்கலாம்.

* வீட்டில் ஆங்காங்கு எலிப் பெட்டியை வைக்க வேண்டும். அதிலும் அந்த பெட்டியில் நல்ல வாசனை உணவுப் பொருட்களை வைத்து, எலி அடிக்கடி வரும் இடம் மற்றும் தங்கியிருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதனால் உணவுப் பொருட்களின் வாசனைக்கு எலியானது பெட்டிக்குள் சென்று மாட்டிக் கொள்ளும். பின் அதனை வீட்டிற்கு மிகவும் தொலைவில் விட்டுவிட வேண்டும்.

* எலிகளுக்கு புதினாவின் வாசனை என்றால் அறவே பிடிக்காது. எனவே வீட்டைச் சுற்றி புதினாவால் செய்யப்பட்ட எண்ணெய் அல்லது வாசனை திரவியத்தை எலி தங்கியிருக்கும் இடத்தில் தெளித்தால், அதனை வீட்டிற்குள் வராமல் விரட்டலாம்.

* அதுமட்டுமின்றி எலிகளுக்கு அந்துருண்டையின் வாசனை பிடிக்காது. ஆகவே வீட்டில் ஆங்காங்கு அந்துருண்டையை வைத்து விட்டால், எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இவையே எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி.

வேறு ஏதாவது எளிதான வழிகள், உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.