இந்து மத வரலாறு - பாகம் 21

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips


மின்னலை ஆயுதமாகக் கொண்ட இந்திரன் தான் வேதப் பாடல்களில் முழுமுதற்கடவுளாக கருதப்படுகிறான். மக்களின் அபிமனாத்திற்குய கடவுளாகவும் நான்கில் ஒரு பகுதி இந்திரனை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்கு அடுத்த படியாக அக்னியும் மூன்றாவதாக மழையை தரும் வருணனும் நான்காவதாக காற்றுக் கடவுளான வாயுவும் சூரிய சந்திரர்களும் வணங்கப்படுகிறார்கள். பருவக்காலங்களில் வரும் மந்த மாருதமும் சண்டமாருதமும் காலை பொழுதின் நாயகியான உஷாவும் கோபத்தோடு இருக்கும் ருத்திரனும், விஷ்ணுவும், அஷ்வினி தேவர்களும், பிரகஸ்பதி, பிரஜாபதி, அதிதி என்று இன்னும் பல தேவதைகளும் வேத ரிஷிகளின் பாடல்களால் ஆராதிக்கபடுகிறார்கள். இந்த பாடல்களில் எந்த தேவதையும் மனித வடிவமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக புருஷ சூத்தகம் மட்டுமே கடவுளை மனித வடிவில் வர்ணனை செய்கிறது. அது ஏன்?

மிக முக்கியமாக இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனை மனித வடிவில் காட்ட முயற்சிக்கும் புருஷ சூத்தக பாடல் ரிக் வேதத்தின் கடைசி பகுதியாகத்தான் வருகிறதே தவிர முதற்பகுதியிலோ நடுப்பகுதிலோ வரவில்லை. எனவே சென்ற அத்யாயத்தில் நாம் சிந்தித்த படி பூர்வ குடிமக்கள் தான் கடவுளை மனித வடிவில் வணங்கினார்கள் அவர்களின் கொள்கைகளை பிறகு வேதங்களோடு இணைக்கப்பட்டன என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறதல்லவா.

ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை. வர்ணம் என்ற வார்த்தை மனித நிறங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர சாதியை குறிக்க பயன்படவில்லை. வெள்ளை நிறம் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள். கருப்பு நிற மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள். தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும். இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல் இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது.

ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள். ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கருதப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல் சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கபட்டார்கள் அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை. சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம்.

இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வா மித்திரர் மகரிஷி அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவான். இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறான். வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும்.

இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள். நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வலுவாக இருப்பதை பலர் அறிவார்கள். ஆனால் வேதகாலத்தில் உணவை தயாரிப்பதிலும் உண்பதிலும் எந்த பாகுபாடும் இருந்ததாக தெரியவில்லை. ரிக் வேதத்திலுள்ள பல பாடல்களில் சூத்திரர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் உண்டதற்கான பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. உணவு விஷயத்தில் மட்டுமல்ல திருமண விஷயத்திலும் பாகுபாடுகள் வேதகாலத்தில் இல்லை. சத்திரிய பெண்ணை பிராமணனும், பிராமணப் பெண்ணை சூத்திரனும் மணந்து கொண்டதாக பலத் தகவல்கள் கிடைக்கின்றன. இதை எயாதி, ருஷ்யசுருந்தர் ஆகியோர் கதைமூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

மனித வடிவில் இறைவனை உருவப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு தலையும் இரண்டு கால்களும், கைகளும் கொடுத்தால் அவனும் சாதாரண மனிதனாக கருதப்பட வாய்பிருக்கிறதே தவிர சர்வசக்தி வாய்ந்த ஆண்டவனாக கருதமுடியாது. அதனால் வேதக் கவிஞன் இறைவனுக்கு ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும் கொடுத்து உருவகப்படுத்துகிறான்.


தன்னைக் காட்டிலும் சக்தி மிகுந்த வேறு ஒன்று இருந்தால்தான் மனிதன் அதை பயத்துடனும் வியப்புடனும் மதிப்பான். இந்தக் கருத்தை கொண்டுதான் ரிக் வேதத்தில் புருஷ சூத்தகத்தில் பிரமாண்டமான வடிவத்தை இறைவனுக்கு கொடுத்து வேதகால கவிஞன் போற்றிபாடுகிறான். அத்தகைய பிரமாண்ட வடிவுடைய ஈஸ்வரனுக்கு விராட் புருஷன் என்ற பெயரையும் சூட்டுகிறான். விராட் புருஷனை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது.

விராட் புருஷனின் தன்மைகளை பற்றி புருஷ சூத்தகம் விளக்கம் கொடுப்பதை அடுத்து பார்ப்போம்...

தொடரும்....
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism