தமிழ்த்தாத்தாவை
வணங்கி அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாவோம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்ற ஒரு உண்மையே நமது மொழி 'செம்மொழி' தகுதி பெறுவதற்கு போதும் என்றாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பெற அது பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது.
பல மேடு பள்ளங்களை கடந்து இன்று நமது மொழி இளமைக் குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று நமது மொழியைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். பலரை நாம் நினைவுகூற வேண்டுமென்றாலும் ஒருவர் தனிப்பட்டு நிற்கிறார். அவர்தான் தமிழ் முனிவர் என்றும், தமிழ்த்தாத்தா என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் உ.வே.சா. தந்தை பெயர் வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி அம்மாள். சிறுவயதில் அவர் திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார். தமிழில் புலமைப் பெற்றிருந்த தந்தையிடமிருந்தே ஆரம்பத்தில் தமிழ் கற்றார் உ.வெ.சா. நிகண்டு, சதகம் போன்ற பழமையான நூல்களை உ.வே.சா அவர்களுக்கு கற்பித்தார் தந்தை.
பள்ளிப்படிப்பை முடித்ததும் தமிழின் மீதிருந்த ஆழமான காதலால் தமிழில் புலமை பெற விரும்பிட உ.வெ.சா பல்வேறு தமிழறிஞர்களிடம் தமிழ் கற்றார். தமது 17-ஆவது வயதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்தார். அவரிடம் ஆறு ஆண்டுகள் இருந்து ஆழமான தமிழ் அறிவைப் பெற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு சுப்ரமணிய தேசிகர் என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் பாடம் கற்றறிந்ததால் உ.வே.சா ஒரு தலைசிறந்த தமிழறிஞர் ஆனார். அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை. பழமையான ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. அவை அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பட்டவை என்பதால் அவற்றை படித்து உணர்வதற்கே தனித் திறமை தேவைப்பட்டது. அதை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமல் எழுத்தாணி கொண்டு ஓலைகளில் எழுதுவார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
25-ஆவது வயதில் உ.வே.சாவுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் கற்பித்த முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் பல மாணவர்கள் தமிழை நேசிக்கத் தொடங்கினர். 1903-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இணைந்தார். அவர் சேர்வதற்கு முன் மாணவர்களால் மதிக்கப்படாத இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. பற்றோடும், பாசத்தோடும் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறையால் மாணவர்கள் தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக பார்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் கற்பித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார் உ.வே.சா.
அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடி வடிவில்தான் இருந்தன. அவற்றை படியெடுப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒரு படிதான் இருக்கும். பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்தன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து விடும் என்று கலங்கினார் உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.
கிடைத்தற்கரிய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை "என் சரித்திரம்" என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுலதான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.
மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்... "ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில...சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்"... என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்
அதன் பிறகு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தார். அவரின் தமிழ்த்தொண்டை பாராட்டி 1906-ஆம் ஆண்டு 'மஹாமஹோபாத்யாய' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரது 87-ஆவது அகவையில் நின்றது. அந்தக்கணம் இனிமேல் தம்மை யார் காப்பாற்றப்போகிறார் என்று எண்ணி தமிழன்னையும் கலங்கியிருக்க வேண்டும்.
தமிழன்னைக்கு அணி சேர்த்தவர்கள் அணியில் உ.வே.சா என்ற தமிழ்த்தாத்தாவுக்கு நிலையான இடம் உண்டு. அவரது அரும் முயற்சி இல்லாதிருந்தால் பல தமிழ்க் கருவூலங்களை காலம் கரைத்திருக்கும். அந்த தனி மனிதனின் முயற்சியால் தமிழன்னை மெருகேறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் செம்மொழியானதற்கு அவரைப் போன்றவர்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது மொழியின் முக்கிய கூறுகள் சிதைந்து போவதை தடுத்து நிறுத்த அவருக்கு உறுதுணையாய் இருந்தவை சிந்தனைத் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், விடாமுயற்சியுடன் எத்தனை இன்னல்கள் வந்தாலும் எண்ணியதை முடிக்கும் துணிவும்தான். அதே பண்புகள் நமக்கும் இருந்தால் உ.வே.சா ஐயாவுக்கு தமிழ் என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கு நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
(தகவலில் உதவி -
நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர் மற்றும் நன்றி தெரிந்ததை
சொல்கிறேன்.blogspot)