பகவான் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:20 | Best Blogger Tips
பக என்றால் நிகரற்றவன் என்று பெருளாகும். எனவேதான் இறைவனை பகவான் என்று கூறுவார்கள். பிரம்மங்கள் எத்தனை என்று எண்ணிக்கையில் கூற முடியாது என்பார்கள். எனினும் சிவனுக்கு பஞ்சபிரம்மன் என்ற சதாசிவ நாமம் உண்டு. அந்த சதாசிவத்திலும் 25 முகங்கள் கொண்ட மஹாசதாசிவரூபம் உண்டு. சிவம் என்றால் பலரும் பலவிதமான பொருள் கூறுவார்கள். ஆனால் உண்மையான பொருள் நல்லோர்களின் உறைவிடமானவர் என்பதே. சங்கரன் என்றால் மங்களம் தருபவர் என்று பொருளாகும். மூன்று கண்களில் மற்ற இரு கண்களுக்கும் பொருந்தாமல் மேல் நோக்கிய மூன்றாவது கண்ணை உடையவராதலால் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுவார். சிவ மூர்த்தங்கள் 64 யும் தாண்டி அனேக மூர்த்தங்கள் உள்ளன. அவற்றை அதோமுக மூர்த்தங்கள் என்று குறிப்பிடுவார்கள். பெரும்பாலான மூர்த்தங்கள் ஆலயங்களில் சிற்பங்களாய் வடிக்கப்படாமலும், மக்களால் அறியப்படாமலும் உள்ளன.

சிவபெருமான் அல்லது சிவனடியார்கள் என்றால் நம் நினைவில் தோன்றும் பொருட்கள் என்ன ? என்று பார்த்தோமானால், உருத்திராட்ஷம்,கமண்டலம், காசாயம், சடைமுடி, வாசிக் கோல் எனப்படும் தண்டம், வில்வம், விபூதி போன்றவைகளாகும். தெய்வங்களால் வழங்கப்படும் வல்லமைகளுக்கு அருள் என்று பெயர். இந்த அருள் விபூதி, பூதி, ஐஸ்வரியம் என்ற மூன்றாகக் குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று வல்லமைகளும் எட்டு வகை சித்திகளில் அடக்கப்படுகின்றன. இச்சித்திகளே இறையருளாக வெளிப்படுகின்றன. விபூதி என்பது ஆனவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்களை எரித்து பஸ்பமாக்கி, உடலில் குறிப்பிட்ட இடங்களில் இருக்கின்ற இறைத் தத்துவங்களுக்கு அறிவிக்க வேண்டி தரிப்பதாகும். விபூதி என்றால் உணர்த்துதல் என்று பொருள்படும். சிரசில் சிவமும், நெற்றியில் மகேஸ்வரனும், மார்பில் ருத்ரனும், நாபியில் விஷ்ணுவும், முழந்தாள்களில் பிரம்மாவும், புஜங்களில் விநாயகரும், கந்தரும், முழங்கைகளில் தேவேந்திரனும், ஆதிசேஷனும், மணிக்கட்டுகளில் சரஸ்வதியும், மகாலட்சுமியும், விலா இரண்டிலும் வாமாதி சக்திகளும், முதுகில் பிரஜாபதிகளும், கண்டத்தில் ஏகதசருத்ரர்களும் வீற்றிருந்து விபூதி பூசுவதால் மனம் மகிழ்ந்து அருள்கின்றார்கள். எனவே விபூதி தரிக்கும் போது மும்மலங்களையும் எரித்து சாம்பலாக்கி பூசுகிறேன் என்கிற எண்ணமும், பாவமும் அவசியம்.

விபூதியானது, 11 வகையான ருத்ர மூலிகைகளை காராம்பசு என்கிற அக்னிஹோத்ரிக்கு உண்ணக் கொடுத்து, அதன் சாணம் தரையில் விழாமல் வஸ்த்திரத்தில் பிடித்தெடுத்து, அதை பஞ்சாட்சரம் சொல்லி கையளவு உருண்டைகளாகப் பிடித்து காயவைத்து, 1008 உருண்டைகள் சேர்ந்த பின்பு சிவ சகஸ்ர நாமமும் , திருநூற்றுப் பதிகமும் சொல்லி மண்பூசி, புடம் வைத்து, பின்பு ரம் என்கிற அக்னி மந்திரம் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ருத்ர மந்திரங்களைக் கூறி, நெருப்பு அனைந்த பின்பு சாந்தி மந்திரங்களைச் சொல்லி வில்வக் குடுவை அல்லது மண்சட்டியில் சேகரித்து வைப்பதாகும். இதுவே விபூதியாகும். மேலே குறிப்பிட்டுள்ள சாஸ்த்திர முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியே காப்பு என்றும், ரட்ஷை என்றும், திருநீறு என்றும் சித்தர் பெருமக்களால் கூறப்பட்டுள்ளது. இதுவே மந்திரத் திருநீறு. இப்போது நாம் பூசிக் கொள்வது கடல் சிப்பிகளின் பவுடராகும். இது விபூதி அல்ல வெள்ளை அவ்வளவுதான். பழனி போனீர்களானால் அபிஷேகஜாமான், அபிஷேகஜாமான் வாங்குங்கள் என்று கடைக்காரர்கள் உங்கள் கையைப் பிடித்து இழுப்பார்கள். சரி வாங்கிக் கொள்வோம் என்றால், பெரிய லிஸ்ட் போட்டு காசைப் பிடுங்கி விடுவார்கள். அதில் பார்த்தீர்கள் என்றால் ஒரு பொருளை இரண்டு முறை எழுதுவார்கள். குங்குமம் என்று போட்டிருக்கும் வேறொரு இடத்தில் சிகப்பு என்று போடுவார்கள் விபூதி என்று போட்டிருக்கும் வேறொரு இடத்தில் வெள்ளை என்று போட்டிருக்கும். அவர்கள்தான் விபூதியை வெள்ளை என்று ஒப்புக் கொள்கிறார்கள். உண்மையில் அது விபூதி அல்ல. இரசாயனப் பொருள் கலந்த சிப்பிப் பவுடர். லிஸ்ட் கடைசிவரை உங்கள் கைக்கே வராது. மொட்டை அடிப்பது அர்ச்சனை செய்வது என்று எல்லாவற்றையும் அவர்களே முடித்து மொட்டை மண்டையில் இரண்டாவது மொட்டையும் போட்டு பட்டையை சாற்றி, சந்தனத்தை தடவி வழியனுப்பி வைப்பார்கள்.

அதைப்போல வில்வபத்ரத்தை மாதப் பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி போன்ற நாட்களில் மரத்தில் இருந்து பறிக்கக் கூடாது. மற்ற தினங்களில் சூரிய உதய வேளையில் சிவ அனுஷ்டானத்துடன் பறித்து, ஆறு மாத காலம் வரை பத்திரப்படுத்தி உபயோகிக்கலாம்.
ஒரு நாளில் எல்லா நேரமும் இறைவனுக்குறியதே என்றாலும், அந்த பரம்பொருளின் அனுக்கிரகம் பெற்ற தேவர்கள், ரிஷிகள், பூத, பைசாசங்களுக்கென்று சில குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிரம்ம முகூர்த்தத்திலிருந்து அதிகாலை வேளை வரை தேவர்களுக்கு உரியது.முன் பகல் வேளை ரிஷிகளுக்கு உரியது. நடுப்பகல் பிதுர்களுக்கு உரியது. எனவே இவ்வேளைகளில் தர்ப்பணம் செய்யலாம். பிரதோஷகாலம் பூத, பிரேத,பைசாசங்களுக்கு உரியது. எனவே தான் அவ்வேளைகளில் இறை நாட்டம் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்லப்பட்டுள்ளது. இவ்வேளையில் மக்களைக் காத்தருளவே இறைவன் ஆனந்த தாண்டவம் ஆடுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. நடுநிசி ராட்க்ஷஸர்களுக்கு உரியது. இப்படி ஒரு நாளின் காலங்கள் பலவாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக ஒவ்வொரு திதியிலும் நம் உடலின் உணர்வு என்கிற அமுத நிலை ஒவ்வொரு இடத்தில் மாறிமாறி தங்கும் என்று சொல்கிறார்கள். அந்த நாட்களில் அறுவை சிகிச்சை அந்த குறிப்பிட்ட பகுதியில் செய்தால் உடலுக்கும், உயிருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று வைத்திய நூல்கள் சொல்கின்றன. பெரும்பாலும் அமாவாசையை அடுத்த வளர்பிறை 15 நாட்கள்அமுத நிலைக் காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பிரதமை - பெருவிரல், துவிதியை - உள்ளங்கால், திரிதியை - முழங்கால், சதுர்த்தி - தொடை, பஞ்சமி - குதம், சஷ்டி - நாபி, சப்தமி - மார்பு, அஷ்டமி - கைகள், நவமி - கழுத்து, தசமி - உதடு, ஏகாதசி - நாக்கு, துவாதசி - நெற்றி, திரியோதசி - புருவம், சதுர்த்தசி - பிடரி, பௌர்ணமி - உச்சந்தலை.

இந்த குறிப்பிட்ட திதிகளில் இந்த உறுப்புகளுக்கு வைத்தியமோ, கடுமையான வேலையோ செய்வதை தவிர்க்க வேண்டும்

 
Thanks to FB Hindu Madurai