தனி நபரா நீங்கள்?: நிதியை சேமிக்கும் வழிகளை தெரிஞ்சுக்கோங்க

மணக்கால் அய்யம்பேட்டை | 12:29 PM | Best Blogger Tips
Single Person S Financial Planning

 நீங்கள் இளமையான தனி நபராக இருந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை கவலையற்றதாகவும், நீங்கள் அதனை மிகவும் அனுபவித்தும் வாழ்ந்து வருகிறீர்கள்.

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகள் ஏதும் இல்லாததால் நீங்கள் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக செலவழிப்பதிலும், உயரிய வாழ்க்கை முறை வாழ்வதிலும், விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் பெருஞ்செலவு பிடிக்கின்ற விடுமுறைகள் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், உங்களின் கவலையற்ற இந்த நிகழ்காலம், தொலைநோக்குப் பார்வையுடன் நீண்டகால நிதித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலிருந்து உங்களை தடுக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளை என்ன நேரும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. உங்கள் நிகழ்காலம் வளமாக இருப்பின், உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக்கக்கூடிய வகையில் திட்டமிட்டுக் கொள்ளுதல் புத்திசாலித்தனம்.
உங்கள் திட்டமிடுதல் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், உங்கள் எதிர்காலம் நேர்மாறாகும் பட்சத்தில் இன்று நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் எதையும் இழக்காதவாறு, உங்களுக்கு கை கொடுக்கும் வண்ணம் அமைய வேண்டும்.
நீங்கள் தனிநபராக இருப்பின், நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி பார்ப்போம்.
உங்களின் தற்போதைய நிலைமை:
நீங்கள் தற்போது உங்கள் இருபதுகளில் இருப்பதாகவும், உங்கள் சம்பள வளர்ச்சி ஒரு ஆண்டுக்கு 12 சதவீதம் உள்ளதாகவும் வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் 55வது வயதில் ஒய்வு பெறும்போது பணவீக்கம் ஆண்டுக்கு சுமார் 7 சதவீதமாக இருக்கும்.

இந்நிலையில், நீங்கள் செய்ய வேண்டியவை:
செலவழிக்க தயங்காதீர்கள்:

நன்றாக செலவழிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கத் தயங்காதீர்கள். நன்றாக செலவழித்தால் தான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். உங்கள் மொத்த மாத சம்பளத்தில் 20 சதவீதம் உங்கள் மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் செலவிடலாம். பைக் பயணங்களை அனுபவியுங்கள்; புகைப்படம் எடுக்கச் செல்லுங்கள்; அல்லது நீங்கள் மிக விரும்பும் ஏதாவதொரு செயலைச் செய்யுங்கள்.

அபாயங்களை தவிர்க்காதீர்கள்:

நீங்கள் இளமையானவர்; இன்னும் உங்களுக்கு வயது உள்ளது. கடன் முதலீடு என்பது நேரம் குறைவாக உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கானது. உங்கள் அதிகபட்ச சேமிப்பு, பங்குகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பங்கு முதலீடு என்பது அபாயகரமானது தான் என்றாலும் காலப்போக்கில் அதிக லாபம் ஈட்டக்கூடியது. நீங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்தால், அது உங்கள் எதிர்காலம் முழுமைக்குமான நிதித்தேவையை ஈடு செய்யும். இதன் உச்ச விதி என்னவெனில், 100-லிருந்து உங்கள் வயதை கழித்தால் கிடைக்கும் எண்ணின் அளவுக்கான சதவீதத்தை உங்கள் சம்பாத்தியத்திலிருந்து பங்குகளுக்கு ஒதுக்கவும்.

ரொக்கத்துடன் இருங்கள்:

உலகம் மீண்டும் பொருளியல் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, நீங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. இப்போதுள்ள நிலையற்ற சந்தையில், எந்த வேலைக்கும் உத்தரவாதம் கிடையாது. எப்போழுதும் ரொக்க நிதியுடன் இருங்கள். அப்போது தான், அடுத்த ஆறு மாதத்திற்கு நீங்கள் ஒரு பைசா சம்பாதிக்காவிட்டாலும், உங்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் - செய்யக் கூடாதவை:

அதிகமாக செலவழிக்காதீர்கள்:

செலவழிப்பது நல்லது தான். ஆனால் கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வது தவறு. உங்கள் வரையறைக்குட்பட்டு செலவழியுங்கள். உங்கள் நிதியாண்மை தொடர்பான எல்லா தவணைகளையும் கட்டிய பின்னரும், உங்களால் ஒவ்வொரு மாதமும் செலுத்தக்கூடிய அளவில் உள்ள கடன் அட்டை ரசீதுத் தொகை தான் உங்கள் வரையறை என்பது.

தவணைத் தொகையை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்:

நீண்ட கால கடன் திட்டத்தில், உங்கள் தகுதிக்கும் மீறி முதலீடு செய்யாதீர்கள். ஒரு கார் மற்றும் ஒரு வீட்டுக்கான தவணை மட்டுமே போதுமானது. இன்னொரு வீட்டை தவணை முறையில் வாங்குவதென்பது தகுந்த யோசனை அல்ல. வேலை இல்லாத நிலைமை உருவானால் எவ்வாறு தவணைத் தொகையை செலுத்த முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

வருங்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்:

ஒரு நாள் நீங்கள் தனிநபர் அந்தஸ்திலிருந்தும், கடமைகளற்ற நிலையிலிருந்தும் வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த சமயத்தில் கை கொடுக்கும் வகையில், முன்யோசனையோடு திட்டமிட வேண்டும். உங்களுக்கு திருமணமாகி, உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும் காலகட்டத்தை குத்துமதிப்பாக மதிப்பிடுங்கள். உங்கள் திருமணத்தின்போதும், அதற்குப் பின் குழந்தையின் படிப்புச் செலவிற்கும், அதிகமான நிதி தேவைப்படும். நீங்கள் இந்நிதித் தேவைக்கேற்ப முன்னரே திட்டமிடவில்லையென்றால், அந்தச் சமயத்தில் நீங்கள் பெரிதும் கஷ்டப்பட நேரிடும். இந்த வருங்காலத் தேவைகளுக்குத் தக்கவாறு நிதியை சேர்த்து வைப்பது அவசியம். இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை; ஏனெனில், அது உங்கள் கைகளில் தான் உள்ளது.
Thanks to Thatstamil.com