கோடைக்கேற்ற உணவு வகைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:50 AM | Best Blogger Tips


இப்போது கோடைக்காலத்தின் உச்சக்கட்டம் என்பதால் அனைவரும் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். கோடையின் பாதிப்பால் இலவசமாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

வெள்ளரி:

ஆங்கிலத்தில் "வெள்ளரியைப் போல குளிர்ந்தது" என்றொரு சொற்றொடர் உண்டு. அதுவே வெள்ளரி எவ்வளவு குளிர்ச்சியானது, நீர்ச்சத்துமிக்கது என்பதைக் காட்டிவிடுகிறது. வியர்வை போன்றவற்றின் மூலம் உடம்பிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேறும்போது உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரியின் தோலில் அதிகமாக "ஸ்டீரால்" உள்ளது. இந்த "ஸ்டீரால்" கொழுப்பைக் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே வெள்ளரியைக் கழுவிவிட்டு தோலைச் சீவாமலே சாப்பிடலாம். காரணம் தோலில்தான் அதிக மாக "ஸ்டீரால்" உள்ளது. வெள்ளரி குறைவான கலோரியை அளிக்கக்கூடியது என்பதால் எவரும் இதை விரும்பிச் சாப்பிடலாம்.

லெட்டூஸ்:

இதில் 90 சதவீதம் தண்ணீர்தான். எனவே காய்கறிக் கலவையாக லெட்டூஸை சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி:

அதிக தண்ணீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்குத் தடை போடக்கூடியது. தக்காளிக்கு அதன் தனிச்சிறப்பான சிவப்பு நிறத்தைத் தரும் "லைக்கோபீன்" என்ற வேதிப்பொருள், வெயில் காலத்தில் நமது சருமம் வெயிலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. தக்காளியில் "வைட்டமின் ஏ" சத்தும் அதிகமாக உள்ளது.

தர்ப்பூசணி:

வெயில் காலத்தில் அதிகமாக விற்பனையாவது தர்ப்பூசணி. இதைத் தர்ப்பூசணி என்பதை விட "தண்ணீர்ப்பூசணி" என்றே கூறலாம். வெயில் வாட்டும் நேரத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, புதிதாகத் துண்டு போடப்பட்ட, சாறு நிறைந்த தர்ப்பூசணியை சாப்பிடலாம். தண்ணீர்ச் சத்து நிறைந்த, கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணி சக்தி வாய்ந்த "ஆன்டி ஆக்சிடன்ட்களை" கொண்டுள்ளது. உடம்பில் நச்சுக்களின் தீமையை எதிர்க்கக் கூடியவை இவை. தர்ப்பூசணி நார்ச்சத்தும் செறிந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஸ்ட்ராபெர்ரி:

வெளிநாட்டுப் பழவகையான ஸ்ட்ராபெர்ரியை நாம் அதிகமாகச் சாப்பிடுவதில்லை என்றபோதும், இதுவும் அதிகமாக தண்ணீர்ச் சத்து கொண்டது. தவிர "வைட்டமின் சி" சத்தும் மிக்கது. அதிகமான சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பாதிப்புகளை இது சரிப்படுத்தக்கூடியது. இவை தவிர ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மற்ற ஒரு வேதிப்பொருள் "பிளேவனாய்டு" என்பதாகும். இது புற்றுநோய்க்குத் தடை போடக்கூடியது.

காய்கறிகளைக் கொண்டு சூப் தயார் செய்து, அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும். அப்புறம் என்ன... அரிப்புதான்! வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.

மேலே குறிப்பிட்ட பழங்களைத் தவிர பொதுவாகப் பழவகைகள் அனைத்தும் கோடை காலத்துக்கு ஏற்ற நன்மை தருபவைதான். எனவே எவ்வளவு பழங்கள் முடியுமோ, அவ்வளவு பழங்களை அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்றவையும் நன்மை பயப்பவைதான். உங்களுக்கு விருப்பமானதை அன்றாடம் சாப்பிட்டு வெயில் காலத்தில் உங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம்.