கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது ? இதை தடுக்க சில வழிகள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.

இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

மது, போதை பாதிப்பு

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர்க்கவும்.

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

ஊட்டச்சத்துணவு அவசியம்

நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.