குங்குமம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips
மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு. ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம். உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது. குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும்.

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.

மிகவும் கிராக்கியான பொருள். ஆகவே அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. தேங்காய்ப்பூவில் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள். 'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும்.

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு. இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது. பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள்.

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும். வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்.


Thanks to :இந்து மத வரலாறு - Religious history of hinduism