லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:12 PM | Best Blogger Tips



 சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்!

படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி?

சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை!
நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-)

சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் high profile சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்!

முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி!
ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்லிட்டதா இயக்குனர் பெருமை பட்டுக்கிடுவாரு! நம்ம கமல் சாரும் இன்னும் சில இயக்குனர்களும் பல படங்களில் இந்த "டெக்னிக்"கைப் பயன்படுத்தி இருக்காங்க! :-)

சிவலிங்கம் பார்க்க "அப்பிடி" இருக்கோ இல்லையோ, இப்படிச் சொல்லிச் சொல்லி, "அப்பிடியே" பார்க்க நாமளும் பழகிக்கிட்டோம்!
அட ஆமாம்-ல! "அப்பிடித் தான்-ல" இருக்கு; நம்ம முன்னோர்கள் எல்லாரும் படா கில்லாடியா இருந்திருக்காங்கப்பா-ன்னு கல்லூரி நண்பர்கள் கூட நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு Time Pass ஆகும்! இத வச்சியே கல்லூரியில் கும்மி அடிக்கும் அதி தீவிர சிவபக்த குழாங்களும் உண்டு! :-)

ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்த வடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க என்பதைக் கொஞ்சம் எளிமையா, எல்லாருக்கும் புரியிறா மாதிரி சொல்லனும்னா

இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!


* ஹீரோ போல, முருகனும் கண்ணனும் அழகாகச் சிரித்தால் = உருவம்!
* உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ) உருவமும் இல்லை, அருவமும் இல்லை = அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!

உருவமாகப் பார்த்தால் இறைவனும் மனுசனைப் போலத் தான்! கை கால் காது மூக்கு-ன்னு எல்லாம் கடவுளுக்கும் இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா? மூக்குல மூச்சு விடுவாரா-ன்னு நெனச்சிக்குவோம்!

"உருவம்-னா வெறும் மனுச உருவம் மட்டும் தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம் கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம் கடவுள் இருக்க மாட்டாரா?"-ன்னு சில பேரு குறுக்குக் கேள்வி கேப்பாங்க!
ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனுசன்களாய் பல உருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!

சரி...உருவம் பற்றிச் சொன்னீங்க! இறைவன் அருவமாகவும் இருக்காருன்னு சொல்லிக் கன்பூசன் பண்ணுறாங்களே!
உருவமே கெடையாதுன்னு சொல்லுறத நம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பா நம்புறது?

* நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத் தெரியாது!
* பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்! கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப் பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே தண்ணியும் எடுத்துக்குது-ல்ல? அதே போலத் தான் இறைவனும்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி!
எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக இருக்கு!

லிங்கம்=லிங்+கம்
*லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
*கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (emerge)
இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!


சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு,
ப்ரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது
....என்று பல "புராணக் கதைகள்" வழங்கினாலும், அவையெல்லாம் வெறும் கதைகளே!

ஆனால், லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்
வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

இது வரைக்கும் சொன்னது புரிஞ்சுதோ புரியலையோ,
சிவலிங்கம் "அதை"க் குறிக்கவில்லை என்பது மட்டுமாவது புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! :-)
வாங்க சிவலிங்கத்தின் அமைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம்!

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்காங்க!

* லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
* அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!
அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது!

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!

* மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!
* அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!
பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!
ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!:)
இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக
தேவகீ நந்தன ஸ்ரஷ்டா-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி"-ன்னு வரும்!
ஆத்ம யோனி-ன்னா ஆத்மா செல்லும் பாதை! இதுக்கு விபரீதமா என்ன பொருளைச் சொல்வீங்க? ஆத்மாவுக்கு ஏதுங்க "யோனி"? :-)

வடமொழியின் பல குறைபாடுகளுள் இதுவும் ஒன்று!பல பொருட்களையும் ஒரே சொல்லில் சொல்ல வந்தா இப்படித் தான் ஆகும்!
தமிழில் இது போன்ற பெரிய குறைபாடு இல்லை! ஒருபொருட் பன்மொழி-ன்னு எல்லாம் நல்ல வேளை இருக்கு!

நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மணம் என்று பொருள்! ஆனா இன்னிக்குப் பேச்சு வழக்கில அதுக்குப் பொருளே வேற! அது போலத் தான்!
நாற்றத் துழாய் முடி-ன்னு பாட்டில் வருதே! முகைமொக்குள் உள்ள நாற்றம் போல்-னு வள்ளுவர் கூடச் சொல்றாரு!

ச்சே...துர் நாற்றம் வீசும் மல்லி மொட்டு போலத் தான் காதலும் - அப்படின்னு வள்ளுவர் சொல்லுறாருப்பா - அப்பிடியா பொருள் கொள்வோம்? ஹிஹி! அன்னிக்கி என்ன பொருளில் வழங்கினாங்களோ, அப்பிடித் தானே எடுத்துக் கொள்வோம்? அதைப் போலவே தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆவுடையார்=சக்தி பீடம், லிங்கம்=சிவ பீடம்-னு பார்த்தோம்!

ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில்,
எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge),
லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)!
= இது தாங்க எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!
இதுக்குத் தான் இத்தனை சொற் குழப்பம், வார்த்தை விளையாட்டு!

சிவலிங்கம் "அதைக்" குறிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் சொல்லி விளக்கலாம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது!
மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு!
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்!

பகுத்தறிவுப் பாணியில் சொல்லனும்னா, நம்ம இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!
இராவணன் தான் பெரிய மானஸ்தன் ஆயிற்றே! "அப்படி" எல்லாமா அவன் கடவுளை வழிபடுவான்? :-)