பக்தியின் நிலைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:57 | Best Blogger Tips



ஆதிசங்கர பகவத்பாதாள் தமது சிவானந்தலஹரியில், பக்தியின் வெவ்வேறு நிலைகளைப் பல உதாரணங்களோடு மிக அழகாக விவரித்துள்ளார்.

முதலில், பக்தன் பிரயத்தனப்பட்டுத் தன் மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அதை அவருடைய பாதங்களில் வைக்கிறான். அங்கோல மரத்தின் விதையானது, தன் தாய் மரத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறுகிறார் சங்கரர்.

இறைவனிடத்தில் பக்தன் தன் மனதைச் செலுத்தியதும், அவர் அவனுக்குப் பலவிதங்களிலும் அனுகூலமாக இருந்து அருள்கிறார். பக்தன் தம்மைவிட்டுப் பிரிந்து செல்லாமலிருப்பதற்காக, இறைவன் அவனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொள்கிறார் என்று பக்தியின் இரண்டாவது நிலை விவரிக்கப்பட்டுள்ளது. காந்தத்தை நோக்கி ஊசி ஈர்க்கப்படுவதைத் தான் இந்நிலைக்கு உவமையாகக் கூறுகிறார் பகவத்பாதாள்.

பக்தனின் உள்ளம் இறைவனிடத்தில் பரிபூரணமாக நிலைத்துவிட்டதேயானால், அப்பொழுது இறைவன், தமது பங்கிற்கு, பக்தனிடத்தில் எல்லையில்லா அன்பைப் பொழிகிறார் என்று பக்தியின் மூன்றாவது நிலையை சுலோகம் விவரிக்கிறது.

ஒரு பதிவிரதை கணவனுக்கு அன்புடன் சேவை புரியும்போது, எப்படி பதிலுக்குக் கணவனும் அவளிடத்தில் தனது அன்பைக் காட்டுவானோ, அப்படியுள்ளதாம் இந்த மூன்றாவது நிலை.
பக்தனின் பிரேமை வளர வளர, அவன் இறைவனுக்கு ஓர் ஆபரணமாகவே ஆகிவிடுகிறான். உண்மையில், பிரஹ்லாதன் என்று ஒரு பக்தன் இல்லாதிருந்தால், இறைவன் நரசிம்மராக அவதாரமெடுத்து உலகை இரக்ஷித்திருக்க மாட்டார். ஆகையால், ஒரு விதத்தில் பார்த்தால், பக்தனால் இறைவனின் புகழ் மேலும் உயர்கிறது என்றே கூறலாம். இதுவே பக்தியின் நான்காவது நிலையாகும். ஒரு மரத்தைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஒரு கொடி, இந்நிலைக்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

நான்காவது நிலையைக் கடந்ததும், பக்தன் இறைவனோடு முழுமையாக ஐக்கியமாகி விடுகிறான். இதுதான் பக்தியின் உன்னத நிலையாகும். கடலில் சென்று கலக்கும் ஒரு நதியைப் போல், பக்தன் இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகிறான் என்று பக்தியின் கடைசி நிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நதி கடலைச் சென்றடைந்து விட்டால், பிறகு அதனைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காண்பது என்பது இயலாது. அதேபோல், பக்தனும் இறைவனிடத்திலிருந்து பிரிக்க முடியாதவனாகி விடுகிறான்.