சார்லி சாப்ளின்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:36 | Best Blogger Tips
இன்று - டிச.25: சார்லி சாப்ளின் நினைவு தினத்தையொட்டிய சிறப்புப் பகிர்வு...

சுட்டி நாயகன் : சார்லி சாப்ளின் - ஆயிஷா இரா.நடராசன்

அவன் பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர். அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் நாடகக் கம்பெனிகளில் பாட்டுப் பாடி நடிக்கிறவங்க. அவனுக்கு ஓர் அண்ணன். அவன் பெயர் சிட்னி.

ரெண்டு பேரும் ரொம்பப் பாவம். காரணம், அவங்க அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சுட்டாங்க. விவாகரத்துக்குப் பிறகு, ரெண்டு பேரையும் வளர்க்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டம். சார்லஸ் ஸ்கூலுக்கே போனது இல்லை.

அவன் என்ன செய்வான் தெரியுமா? வீட்டு மாடிப்படியின் அடியில் இருந்த சன்னல் வழியே சாலையில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருப்பான். அவனுக்கு அப்பப்போ உடம்பு சரி இல்லாமல் போயிரும். படுக்கையில் அவன் படுத்து இருக்கும்போது, அவனோட அம்மா அவனுக்காக வெளியில் நடப்பதைச் சொல்லி, அழகா நடிச்சுக் காட்டுவாங்க. அவன் அம்மா பேரு ஹெனா. 'சார்லஸ் இவ்வளவு நோஞ்சானா இருக்கானே’னு வருத்தப்பட்டாங்க.

ஒரு நாள்... அம்மா வழக்கம்போல நாடக மேடையில் பாடி நடிக்கப் போனாங்க. அன்னைக்கு முதல் முறையா சார்லஸையும் கூட்டிக்கிட்டுப் போனாங்க. நாடகத்துக்கு சரியான கூட்டம். பாதி நாடகத்துல பாடிக்கிட்டு இருக்கும்போது அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே... திடீர்னு மயக்கம்போட்டு விழுந்துட்டாங்க. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலாட்டா. அந்த நேரம், திடீர்னு அந்தப் பாட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது. யார்னு பார்த்தா, நம்ம சுட்டி நாயகன் சார்லஸ்.

வீட்டில் அடிக்கடி அம்மா பாடுவதைக் கேட்டு மனசில் பதிச்சு இருந்தான். அந்தப் பாட்டை சூப்பராப் பாடிக்கிட்டே மேடையில் வந்து நின்னான். எல்லாரும் கைதட்டினாங்க. மயக்கம் தெளிஞ்ச அம்மாவும் அசந்துட்டாங்க. அப்போது சார்லஸ் வயசு 5.

அப்போ ஆரம்பிச்சதுதான். அம்மா அடிக்கடி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்படுவாங்க. அண்ணனும் தம்பியும் நடிக்கப் போவாங்க. ஆனால், சார்லஸுக்கு அந்த நாடகங்கள் வெறுப்பாக இருந்தன. அவன் கேட்டான், ''அம்மா ஏன் எப்பவும் அழவைக்கும் நாடகங்களையே நடத்துறாங்க? நிஜ வாழ்க்கைதான் கஷ்டமா இருக்கு, நாம் எல்லோரையும் சிரிக்கவெச்சா என்ன?'' என்றான்.

அவன் மனசு முழுக்க ஒரே எண்ணம், 'நாம் உலகையே சிரிக்கவைக்க வேண்டும்’ என்பதுதான்.

சார்லஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது, மன நோய் காரணமாக அவன் அம்மா ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டாங்க. அண்ணனும் தம்பியும் தனியாக விடப்பட்டாங்க. அண்ணனையும் பார்த்துக்கிட்டுத் தன்னையும் பார்த்துக்கும் அளவுக்கு சார்லஸ் திறமைசாலியா மாறி இருந்தான். தி எயிட் லாங்ஷையர் லேட்ஸ் (The Eight Lancashire Lads) என்ற நாடகத்தில் சிரிப்பு நடிகனாக மேடை ஏறியபோது அவனுக்கு வயசு 8. அவன் மேடையில் செய்த சேட்டைகளைப் பார்த்து எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சின்ட்ரெலா, ஜிம், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எந்த வேடத்தில் நடித்தாலும் எல்லாரையும் சிரிக்கவைத்தான்.

ஒரு முறை ஊருக்குள் டேரா போட்ட சர்க்கஸில் ஜோக்கர் வேடம்போட்டு, குழந்தைகளை வயிறு வலிக்க சிரிக்கவெச்சான். 'உலகையே சிரிக்கவைக்கும்’ சார்லி சாப்ளினாக, சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.

'உங்கள் வாழ்வில் சிரிக்காத நாள், வீணாக்கப்பட்ட நாள்’ என்பது சார்லி சாப்ளினின் பொன்மொழி.

- சுட்டி விகடன் (15.12.2012)