சாந்தி பெறு மனமே, சாந்தி பெறு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:24 | Best Blogger Tips
சாந்தி பெறு மனமே, சாந்தி பெறு! 
 
 Do Meditation Reduce Stress
 
 வாழ்க்கை என்பது என்ன... சவால்கள், சலனங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பவாதங்கள், ஏமாற்றங்கள், ஏற்றம், தாழ்வு, மோசடி, வருத்தம், சோகம், சந்தோஷம் இப்படி ஒவ்வொரு அம்சமும் ஒன்றாகக் கலந்த ஒரு கூட்டுக் கலவை. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு அம்சம் வெளிப்பட்டு வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அந்தந்த அம்சத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து அதை சமாளித்து வெல்வதில்தான் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்துக் கொள்வது அடங்கியுள்ளது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை எத்தனை டென்ஷன், பதட்டம், படபடப்பு, அவதி, அவஸ்தை.. வேலைக்குப் போவோருக்கு ஒரு டென்ஷன் என்றால், வீட்டில் உள்ளோருக்கு ஒரு வகையான டென்ஷன். நினைவுகளின் அழுத்தம் தரும் பதட்டம், காதல் தரும் பதட்டம், கணவர்களால் ஏற்படும் பதட்டம், மனைவியரால் ஏற்படும் பதட்டம், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வரும் பதட்டம் என பதட்டங்கள் பலவிதம். ஆனால் இதில் அப்படியே மூழ்கிப் போய் விட்டால் என்னாகும்.. மனம் நொறுங்கும், வாழ்க்கை சிதறிப் போகும். அதிலிருந்து மீள என்ன செய்யலாம்...? இப்படிப்பட்ட மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஓரம் கட்ட தியானம் சிறந்த வழி என்கிறர்கள் நிபுணர்கள். இது மனதையும், உடலையும் ஒரு சேர நார்மலாக்குகிறது, ரிலாக்ஸ் செய்கிறதாம். சிந்தனைகளை சீர்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை அமுங்கிப் போகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தலை தூக்கவும் இவை உதவுகிறதாம். மனதைப் போட்டு அரிக்கும் சிந்தனைகளை தடுத்து நிறுத்தி, இங்கே பார், நீ இவனுக்குத் தேவையில்லை, இவனை நிம்மதியாக இருக்க விடு, இவனை விட்டுப் போய் விடு என்று தடுத்து நிறுத்தும் கவசமாக தியானம் இருக்கிறதாம். சிந்தனைகள் சீர்பட்டாலே மனசு அமைதியாகி விடும் அல்லவா... அதுதான் தியானத்தின் முக்கிய அம்சமாகும். சரி எப்படி தியானம் செய்யலாம்...? மூச்சுப் பயிற்சி - முதலில் நல்ல வசதியான, சவுகரியமான இடத்தைத் தேர்வு செய்து அமர வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும், இறுக்கம் கூடவே கூடாது, அப்படியே காற்று போல உடல் இருக்க வேண்டும். மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். ஆழமாக மூச்சு விடுங்கள், அதேபோல அமைதியாக அதை வெளியே விடுங்கள். கவனச் சிதறலைத் தடுக்க ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து விடும்போது அதை மனதுக்குள் எண்ணிக் கொண்டு வரலாம். இதை ஒரு பத்து அல்லது 20 நிமிடம் வரை செய்யுங்கள். இது ஒருவகை தியானம். இதேபோல மேலும் சில முறைகள் உள்ளன. அதையும் பார்க்கலாம் வாருங்கள். குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்தலாம் - அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி தியானம் செய்யலாம். அதாவது ஒரு வடிவம், வண்ண வித்தியாசம், தட்பவெப்பம், அசைவு ஆகியவற்றைச் சொல்லலாம். பெரும்பாலும் இதுபோன்ற தியானத்திற்கு பூக்கள், மெழுகுவர்த்தியின் ஜூவாலை போன்றவற்றை பயன்படுத்தலாம். அலாரம் கிளாக், மேசை விளக்கு, காபி மக் ஆகியவற்றைக் கூட சிலர் இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதில் தப்பில்லை, நமக்குத் தேவை, கவனக்குவிப்புக்கு ஒரு பொருள். ஒலி மீது கவனம் செலுத்தலாம் - இதுவும் ஒரு வகை. அதாவது ஏதாவது ஒரு சத்தம் மீது நமது முழு மனதையும் செலுத்துவது. மனசு முழுமையாக அதில் ஈடுபட்டு ஒன்றிப் போய் விட வேண்டும். அதற்குத் தேவையான ஒரு ஒலியை நாம் தேர்வு செய்து கவனம் செலுத்தலாம். பெரும்பாலும் ஓம் என்ற ஓம்காரத்தை பலர் இதற்கு தேர்வு செய்வார்கள். இதுதான் என்றில்லை, வேறு ஏதாவது நல்ல ஒலியையும் கூட இதற்காக பயன்படுத்தலாம். ஒலியைத் தேர்வு செய்து தியானத்தில் அமரும்போது மனசு முழுவதையும் அந்த சத்தத்தின் மீது போட்டு விடுங்கள், மனசை முழுமையாக இலகுவாக்கிக் கொண்டு இதைச் செய்யுங்கள். கற்பனைப் பொருட்கள் - இதையும் செய்யலாம். இது இன்னும் அருமையான ரிசல்ட்டைக் கொடுக்குமாம். அதாவது உங்களது மனதுக்குப் பிடித்த ஒரு கற்பனை விஷயத்தை நீங்கள் மனதுக்குள் வரித்துக் கொண்டு அதன் மீது முழு கவனத்தையும் செலுத்துவது. இது மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்குமாம். மனதை சந்தோஷமாக்கவும், லேசாக்கவும் இது உதவும். எதையும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.. உங்களது மனதை சந்தோஷப்படுத்தக் கூடிய எதையும் நீங்கள் கற்பனை செய்யலாம்...ஏன் அழகான தேவதைகளைக் கூட நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டு உங்களது மனதை லேசாக்க முயற்சிக்கலாம். மனசு நிம்மதியாக, சாந்தியாக, சாந்தமாக, சமர்த்தாக இருந்தால்தான் வாழ்க்கையில் தவறுகள் குறையும், செய்யும் செயல்களில் நிதானம் கூடும். செய்து பாருங்கள்!