நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
நாகப்பட்டினம்:
சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தக் கடற்கரை மாவட்டத்தில் காணவேண்டிய வரலாற்றுச் சுவடுகளைப் பற்றி ஓர் அறிமுகம்...
நாகூர்:
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்க்கா இங்குதான் உள்ளது. இது இஸ்லாமிய பெருந்துறவி ஹஸ்ரத் மீரான் சுல்தான் சையத் சாகாப்துல் ஹமீது (ஹசரத்மியான்) அவர்களுக்காக அர்பணிக்கப்பட்டது. இஸ்லாமிய மார்க்கத்தையும் நபிகள் நாயகத்தின் போதனைகளையும் பரப்பி வந்த இவர் கி.பி. 1558 இல், 68ஆவது வயதில் அமரரானார். அப்போது அவருக்கு அமைக்கப்பட்ட சமாதிதான் இந்த நாகூர் தர்கா. ஆண்டுதோறும் நாகூர் ஆண்டவருக்கு இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். கடலோர நகரமானது நாகூர், மதத்தால் மட்டுமல்லாது வணிகத்தாலும் முக்கியத்துவம் பெற்ற நகரமாகும்.
டச்சு ஆளுநர் மாளிகை:
டச்சு ஆளுநர் ஒருவர் கி.பி. 1784 இல் வசித்து வந்த மாளிகை.
டச்சுக் கோட்டை:
1920 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை. டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இருக்கும் இந்தக் கோட்டை தழிழக ஆவணக் காப்பகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.
கடற்கரை:
பழமையான தோற்றத்தை சிதைத்துவிடாமல் இந்தக் கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வாலிபால் மற்றும் கட்டுமரச் சவாரிகளில் ஈடுபடலாம்.
பூம்புகார்:
சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. சோழர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுக நகரமாக இருந்த பூம்பூகாருக்கு தமிழ் இலக்கியத்தில் தனி இடமுண்டு. கண்ணகி பிறந்து வளர்ந்து கோவலனுடன் சேர்ந்து வாழ்ந்த சிறப்பை சிலப்பதிகாரம் இந்த ஊரின் மூலமாகத்தான் சொல்லிச் செல்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை இப்போது பார்த்தாலும் கண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பு. காவிரி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.
மயிலாடுதுறை:
இதை மாயூரம் என்றும் மாயவரம் என்றும் அழைப்பார்கள். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊரை ஆலயங்கள் நிறைந்த ஊர் எனலாம். மயூரநாத சுவாமி கோயில், பரிமள ரங்கநாத சுவாமி கோயில், காசி விசுவநாத சுவாமி கோயில், புனுகேஸ்வரர் கோயில், வதனேஸ்வரர் கோயில், அய்யாரப்பர் கோயில் என்று ஏராளமான கோயில்கள் உள்ளன.
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்:
மகா சிவராத்திரியன்று நாகராஜன் பூஜித்து முக்தி அடைந்த புன்னை மரத்தடியில் தோன்றிய சுயம்பு லிங்கத்தை பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்கிய இடம் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலாய் விளங்குகிறது.
சீர்காழி:
சிதம்பரத்திற்கு அருகே உள்ள சைவத்திருத்தலம். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். தமிழிசை வேந்தர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இதுதான். தமிழ் மணக்கும் திருத்தலம் என்று சொல்லலாம்.
டவுன் கேட்வே:
கி.பி. 1792 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்ட தலைவாசல் இது. டச்சுக் கட்டடக்கலை முறையில் கட்டப்பட்ட இதைப் பின்னாளில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை புதுப்பித்துக் கட்டியது.
தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்:
வள்ளியம்மை தேசபக்தியின் மொத்தத் திருவுருவம். இவரின் திருவுருவமே எவரின் மனத்திலும் தேசபக்த ஞானத்தீயை ஒளிரச் செய்துவிடும் என்று மகாத்மாவால் பாராட்டப்பட்ட தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர்தான் தில்லையாடி. சின்னஞ்சிறு வயதிலேயே இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாய் உருவெடுத்த வள்ளியம்மை. 22.2.1898 இல் பிறந்தார். 22.2.1914 இல் மறைந்தார். பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகத்தான தியாகத்திருவுருவான வள்ளியம்மைக்கு 13.8.1971 அன்று தில்லையாடியில் நினைவகம் ஒன்று திறக்கபட்டது. அம்மையாரின் திருவுருவச் சிலை அவரைப் பற்றிய புகைப்படக்காட்சிகள் அவருடைய வீர வரலாறு போன்றவை இந்த நினைவகத்தில் இடம் பெற்றுள்ளன. இங்கு ஒரு நூலகமும் இருக்கிறது.
திருக்கண்டியூர்:
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த உப்பு சத்தியாக்கிரகம் இங்கும் நடந்தது. மேலும் இங்குள்ள பிரம்ம ஸ்ரீகந்தேஸ்வரர் மற்றும் ஹர்ஷவிமோசன பெருமாள் சிலைகள் சிற்பக் கலைக்குப் புகழ் பெற்றவை.
வேதாரண்யம்:
திருமறைக்காடு என்பது தான் இதன் உண்மைப் பெயர். இங்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் பௌர்ணமி திருவிழா புகழ் பெற்றது.
வைத்தீஸ்வரன் கோயில்:
அங்காரக தலம் என்று பெயர்பெற்ற இக்கோயிலில் வைத்தீஸ்வரன், தையல் நாயகி, முத்துகுமாரசாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். மிகப் பழமையான இந்தக் கோயிலில் சிவபெருமான் வைத்தீஸ்வரனாக எழுந்தருளியுள்ளதாக நம்பப்படுகிறது. நோய் தீர்க்கும் கடவுளாக இவரைக் கருதி வழிபடுகின்றனர். உயர்ந்த கோபுரங்கள் விரிந்த மண்டபம் உறுதியான தூண்கள் என பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் ஆலயம். இந்தக் கோயிலில் வந்து அங்காரகனான செவ்வாய், கார்த்திகேயன், ஜடாயு போன்றவர்கள் சிவனை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள கிணற்றைப் பற்றி சைவப்பெரியார்கள் பாடியுள்ளனர்.
சியோன் தேவாலயம்:
புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள தெய்வீக மலையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள தேவாலயம் இது. கி.பி. 1701 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் கி.பி. 1782-84இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாகூர் கந்தூரித்திருவிழா:
நாகூர் தர்காவில் 10 நாட்கள் நடக்கும் இந்த மாபெரும் திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள் என்பது தனிச்சிறப்பு.
வேளாங்கன்னி திருவிழா:
ஆண்டுக்கொரு முறை வேளாங்கன்னி மாதா கோயில் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அனைத்து மதத்தினரும் இதில் வந்து கலந்து கொள்வார்கள்.
கோடியக்கரை:
காலிமர் பாயிண்ட் என்று அழைக்கப்படும் கோடியக்கரை நாகையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 312.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. பாலூட்டி வகையைச் சேர்ந்த புள்ளிமான், கடுங்கரடி, மனிதக்குரங்கு போன்றவையும் நாரை, கூழைக்கடா போன்ற நீர்ப்பறவைகளும், நட்சத்திர ஆமை, விரியன் பாம்பு போன்ற ஊர்வனவும் வாழ்கின்றன. டால்பின், கடற்சிங்கம், கடற்பசு போன்ற கடல்வாழ் அற்புத உயிரினங்களையும் அவ்வப்போது காணமுடியும். பவளப் பாறைகளையும் இந்தப் பகுதியில் பார்க்க முடியும்.
தரங்கம்பாடி:
நாகப்பட்டினத்திலிருந்து 35 கி.மீ. தூரத்தில் வங்கக் கடற்கரை ஓரமாக காலத்தின் சாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொன்மையான கிராமம்தான் தரங்கம்பாடி. இங்குள்ள கடற்கரையில் ஓசோன் படலம் என்னும் சுத்தமான காற்று மண்டலம் உடல் நலத்திற்கு மிகவும் உகந்ததாகும். டச்சுக்காரர்களுக்கு கோரமண்டல் கடற்கரையில் இருந்த ஒரே வர்த்தக மையம் இதுதான். கி.பி. 1820 இல் இங்கு வந்து கரையிறங்கிய டச்சுக்காரர்கள், 1845 வரை ஆட்சி நடத்தி இருக்கிறார்கள். அதன் பிறகு ஆங்கிலேயரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டனர். டச்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கடல் ஓரத்தில் காப்பரண்கள் கட்டியுள்ளனர். அந்தக் காலக் கட்டத்தில் இங்குள்ள கோட்டை கொத்தளம் சுறுசுறுப்பான சந்தையாக இருந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு 1977 வரை ராணுவத்துறையைச் சார்ந்த பயணியர்களுக்கான மாளிகையாக்கப்பட்டு வந்த இந்த மாளிகையை அதன் பிறகு பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னமாக தமிழக அரசின் தொல்லியல் துறை அறிவித்தது.
சிக்கல்:
முருகக் கடவுளின் புகழ் பெற்ற திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிக்கல் சிங்கார வேலன் என்று இந்த மூலவருக்குப் பெயர். இங்கு சிவபெருமான், விஷ்ணுவுக்கு மட்டுமின்றி அனுமனுக்கும் கூட தனித்தனி கருவறைகள் உள்ளன என்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு. சிக்கல் சிங்கார வேலனை வழிபட்டால் சிக்கல்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கடையூர்:
மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருக்கடையூர். மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த எமனைத் தடுத்து மார்க்கண்டேயனை சிவபெருமான் ஆட்கொண்டது இங்குதான் என்பது புராணம் சொல்லும் வரலராறு. சொல்லடி அபிராமி என்று அபிராமப் பட்டர் அபிராமி அம்மையையே அதட்டிய அற்புதம் நடந்ததும் இங்குதான். அறுபதாம் ஆண்டில் திருமண நாளைக் கொண்டாடக் கூடிய ஒரே கோயிலும் இதுதான்.
வேளாங்கன்னி மாதாகோயில்:
அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் ஆரோக்கிய மாதா வீற்றிருக்கும் வேளாங்கன்னி மாதாகோயில் இங்குதான் உள்ளது. இந்த ஆலயத்தின் திருச்சபை நெடுமாடம் இரண்டு கட்டுக்கள் கொண்டது. ஒன்றில் ஏசுபிரானின் சொரூபம் உள்ளது. மற்றொரு மாடத்தில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி நின்றிருக்கும் வேளாங்கன்னி மாதா வீற்றிருக்கிறாள். வங்கக் கடலோரத்தில் அமைந்திருக்கும் அழகிய ஆலயங்களுள் இதுவும் ஒன்று.
திரு அருங்காட்சியகம்:
ஆரோக்கிய மாதா கோயிலுக்கு எதிரே இந்தத் திரு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பக்தர்கள் அன்னைக்கு காணிக்கை செலுத்திய அரிய பொருட்கள் உள்ளன. புனித விவிலியத்தின் முக்கிய நிகழ்வுகள் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன.
படம் : கோடியக்கரையில் உள்ள சேதமடைந்த சோழர் கால கலங்கரை விளக்கம்!