தொண்டைப் புண் இருக்கா? இந்த உணவுகளை சாப்பிட வேணாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:24 PM | Best Blogger Tips


சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் பருவநிலையானது குளிர்காலமாக இருந்தால், சொல்லவே வேண்டாம். அனைத்து நோய்களும் நமது உடலில் புகுவதற்கு வரிசையாக நின்று, அதற்கான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அவற்றில் முக்கியமாக வரும் ஒரு பிரச்சனையெனில் அது சளி, ஜலதோஷம் போன்றவை தான். ஏனெனில் உமது உடல் புதிதா
ன ஒரு சூழ்நிலையை சந்திக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் சற்று பலமிழந்து இருக்கும். எனவே அப்போது கிருமிகள் உடலில் எளிதில் புகுந்துவிடுகின்றன.

அவ்வாறு உடலில் புகும் கிருமிகள், இருமலின் மூலம் தொண்டையில் சிறிது காலம் தங்கி, அங்கு புண்ணை ஏற்படுத்தி, பெரும் தொந்தரவைத் தரும். அது தரும் தொந்தரவு போதாது என்று நாம் நமது நாவின் சுவைக்கேற்ப சில உணவுகளை சாப்பிடுவோம். ஆனால் அந்த உணவுகள் நமக்கு சுவையை அளிப்பதோடு, அந்த கிருமிகளுக்கு தொல்லையைத் தந்து, அவை அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன.

மேலும் சிலர் அந்த தொண்டைப் புண்ணை சரிசெய்கிறேன் என்ற பெயரில், சாப்பிடக் கூடாத உணவுகளை உட்கொள்கின்றனர். எனவே அத்தகைய தொல்லை தரும் உணவுகளை சிறிது காலம் சாப்பிடாமல் இருந்தால், தொண்டையில் இருக்கும் புண்ணானது பெரிதாகாமல் விரைவில் சரியாகிவிடும். இப்போது அந்த மாதிரியான உணவுகள் என்னவென்று படித்துப் பார்த்து, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நா ஊற வைக்கும் உணவுகள்

நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும். ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.

காரமான உணவுகள்

நிறைய பேர் சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிட்டால், குணமாகிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும். ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பால்

தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால், சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு, அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

காப்ஃபைன்

சூடான காப்பி குடித்தால் நன்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காப்ஃபைனில் உள்ள பொருள் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும். ஆகவே காப்ஃபைனால் ஆன பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.

ஆல்கஹால்

சிலர் தொண்டை புண்ணின் போது ரம் அல்லது பிராந்தியை குடிப்பர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.