விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத்தியம் - 28

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips


அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திகொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டு புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரை சொன்ன காலங்கள் மலையேறி போய் லேட்டஸ்டா "சரி பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு " என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
 
ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவை காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறி கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>
தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ! அப்படியா, சரி சரி கவலை படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிடவேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்று கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துகொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அனேகமாக பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் ப்ராபளம் போலனு விட்டுட்டா போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்து பொறுத்து பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=>
உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்அமைதியா போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டா இருந்தா ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=>
சிலரது வீடுகளில் பேச்சு சூடு பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையை  கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலை தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள் மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு அவளின் முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டு சிரிப்புடனா? முறைத்துக்கொண்டாஇரண்டையும் அலட்சியபடுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்து கொண்டிருப்பாள் மனைவி.

'
நான் தனியா தவிச்சி புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=>
சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்ன சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுகொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கே போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதை போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது எங்கே சென்று முடியும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(
நான் என்னும் முனைப்பு)

"
நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்தி கிழித்து விடும். பெரும்பாலும் இது தலை தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்து கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கபடும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாக சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிபடுகிறது.

ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுபிடித்து வாதத்தை நீடித்துக் கொண்டே செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதை புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தை கொண்டு செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே...!!

ச்சீ போடாமுட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னா இனிமையா  இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமா சொன்னா ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய் தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்து கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படி பட்ட சொல்லை வெளிபடுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்து கொள்வார்களா என அவரவர் வீட்டு சூழலை ஒற்றுமை படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா