முதுமை இனிமையான பருவமா..??

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
முதுமை இனிமையான பருவமா..??

முதுமை இனிமையான பருவமா?. பதில் பலவிதமாக வரலாம். அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை உண்மையில் இனிமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கின்றன சில. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த யதார்த்தம் புரிந்தாலே முதுமை இனிமையா

கிவிடும்.

***

முதுமையை தடுக்க முடியாது. தள்ளிப்போடலாம். வாட்டும் முதுமையை வாழ்வின் யதார்த்தமாக உணர்ந்து மனஉறுதியுடன் செயல்பட்டால் முதுமையிலும் இளமையாக இனிமையாக, வாழலாம். ஆம், அதற்கு முதுமை என்பது உடலின் வளர்ச்சியாக மட்டுமல்லாமல், அறிவின் வளர்ச்சி, அனுபவ வளர்ச்சியாக இருக்க வேண்டும். முதுமைக்கு உயிரணுக்கள், உடல்வளர்ச்சி ஹார்மோன்கள் உற்பத்தி குறைதல், பாரம்பரியம் போன்றவை முக்கிய காரணங்களாகும்.

***

முதுமை கொண்டு வரும் பிரச்சினைகள் ஏராளம். பார்வைக்குறைவு, காதுகேளாமை, தோல்வறட்சி, கை நடுக்கம், முடிநரைத்தல், ஞாபகமறதி மற்றும் மலச்சிக்கல் போன்றவை இயல்பாக ஏற்படும் பிரச்சினைகள். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், மூட்டுவலி, புற்றுநோய் என பல தீவிர நோய்களும் வரலாம். வலுவுள்ள உடலும், உறுதிமிக்க இளமையும் கூட இத்தனை வியாதிகளை தாங்கிக் கொள்ளாது. ஆனால் முதுமையில் இவற்றில் பல வியாதிகள் இயல்பாக தொற்றிவிடும்.

***

முதுமையின் கொடுமையை தடுக்க இளமையில் உறுதியான திட்டமிடல் அவசியம். இளமையில் உடலை எப்படி பாதுகாக்கிறோமோ, அதற்கேற்ப முதுமையில் உடல் தொந்தரவின்றி வாழலாம். எனவே தினமும் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இது பின்னாளில் நீரிழிவு, மாரடைப்பு வராமல் காக்கும். இளமை முதலே கீரை, பால், பழங்கள், ராகி, கோதுமை, கேழ்வரகு அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்.

***

50 வயது முதுமையின் தொடக்கம். அப்போது நோய் இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை அவசியம். முதுமையின் விரோதி தனிமை. தனிமையை தவிர்க்கப் பழகுங்கள். முடங்கினால் முதுமை 6 மடங்கு அதிகமாகிறது என்கிறது ஆய்வு. புத்தகம் படிப்பது, வானொலி கேட்பது என பிடித்தமான பொழுதுபோக்கு ஒன்றை கடைப்பிடியுங்கள். கூட்டங்களுக்கு சென்று வரலாம். நண்பர்களோடு மகிழ்ந்திருங்கள்.

***

முதுமையில் உடல் தளர்வால் கால் இடறி விழ வாய்ப்பு இருப்பதால் கைத்தடி உபயோகிப்பது நல்லது. காது கேட்பது குறைவதால் ஒதுங்கி செல்லாதீர்கள். காதுகேட்கும் கருவியை பயன்படுத்துங்கள். பற்களை இழந்தால் பேச்சும், முகப்பொலிவும் போய்விடும். இதற்கு செயற்கை பல்செட் அணியலாம். கண்பார்வை குறைந்தவர்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டும். கண்புரை இருப்பவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். வேறு கோளாறுகள் தென்பட்டாலும் உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

***

வயதான பிறகு மனது பந்தபாசங்களை எதிர்பார்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்காமல் இருப்பது முதுமையை இனிமையாக்கும். இளைய தலைமுறையினரின் லட்சியங்கள், கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள். தியானம் செய்து மனதை ஒருநிலையில் வைத்திருங்கள். வாரம் ஒருமுறை உண்ணாவிரதம் இருப்பது உடலை சமநிலை செய்ய உதவும். தனிமையை தவிர்க்க மற்றவர்களுக்குத் தொண்டு செய்யலாம். இதனால் உங்கள் மனபாரமும் குறையும்.

***

சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும் முதுமைக்காலத்தில் அவசியம். உறவுகளிடம் தற்பெருமை பேசுவதும், உறவுகளை துண்டிப்பதும் வேண்டாம். முதுமையில் உங்களுக்கான வசிப்பிடத்தை முடிவு செய்து வைத்திருப்பது நல்லது. அது எதிர்பாராத ஏமாற்றங்களை தவிர்க்க உதவும். கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்பட்டவுடன் உங்கள் சொத்துக்களை உயில் எழுதி வைத்து விடலாம். இது வாரிசுகளுக்குள் வீண் பிரச்சினைகளை தடுக்கும். மரணம் நிச்சயமானது. மரணபயத்தை விட்டுவிட்டு வாழப்பழகினால் முதுமை இன்னும் ஆனந்தமாகும்.

***

முதுமைக் காலத்தில் பணம் மிகவும் அவசியம். அன்பு, பாசம் எல்லாம் இங்கே இரண்டாம்பட்சம் தான். நடுத்தர வயதிலிருந்தே முதுமையை எதிர்கொள்ள பொருளாதார ரீதியில் ஒரு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணங்களும், செயல்பாடுகளும் ஒரே சீராகவும், ஆணித்தரமாகவும் இருந்து செயல்பட்டால், முதுமைக் காலத்தில் ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் இளமையில் நல்ல உடற்பயிற்சி, சீரான உணவு, முதுமையில் இனிய பொழுது போக்கு, போதியஅளவு பணம் இவற்றுடன் மனஉறுதியும் இருந்தால் முதுமை வசந்தமாகும்.