டூக்கான் பறவை பற்றிய அறிய தகவல் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips


"டூக்கான்" அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச் (Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால் (Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ (Ramphastos Toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அ...
லகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பை அமெரிக்க அறிவியல் ஆய்விதழ் சயன்சு என்பதில் வெளியிட்டுள்ளார்.

இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால் வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும் பறவையின் நடவடிக்கையையும் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.

இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற் போல தலையின் அலகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.

மரக்கிளைகளிலும் மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை தான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக வாழ்கின்றன.