ஈகோ

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

இது பரவலாக பயன்படுத்தும் சொல்லாகி விட்டது. யாராவது, யாரை பார்த்தாவது, அவர் நடவடிக்கை பிடிக்க வில்லை என்றால், அந்தாளு ஈகோ பேர்வழி என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்.

அது என்ன ஈகோ?
--------------------------

தலைக்கனம், திமிர், ஆணவம், கர்வம் இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு இன்னொரு பெயர் ஈகோ.

நான் என்று சொல்வது கூட ஈகோ. நாம் என்று தண்டக்கமாக சொல்லணும். அல்லது யாம் என்று சொல்லலாம் தவறில்லை.

அப்படியா?
---------------
அப்படித்தான். இதை நான் சொல்லலை. ஊருக்குள்ளே அப்படித்தான் பேசிக்கிறாங்க.

பாருங்கையா.... இந்தாளை. நான்னு சொல்றதே ஈகோ, தலைக்கணம்னு சொல்லும்போது, என்ன தெனாவெட்டு இருந்தா, நெஞ்சழுத்தம் இருந்தா, நான்னு சொல்லுவான்! சிந்தனை வருதா? வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம். வாங்க பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.

இந்த ஈகோ என்கிற வார்த்தைக்குள் ஏகப்பட்ட பொருள் பொதிந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

தன்னம்பிக்கை, தலைக்கணம் இரண்டுக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். இதையே கொஞ்சம் மேம்படுத்தி, என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கணம் அல்லது ஈகோ என்கிறார்கள்.

இங்கேதான் என்னால் உடன் பட முடியவில்லை. ஒரு சுலோகம் உண்டு. உழைக்க தெரிந்தவனால் தான் பிழைக்க முடியும்.

தன்னை உணர்ந்தவனால் தான் தலைவனாக முடியும். இந்த தன்னை என்கிற வார்த்தைதான் தவறுதலாக தலைக்கணம் என்று உச்சரிக்க படுகிறது

நான் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தலைக்கணம் பிடித்தவர்களும் அல்ல. நாம் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தன்னடக்க பேர்வழியும் அல்ல.

இன்று மைன்ட் பவர், ஆழ்நிலை தியானம், மூச்சு சுவாச பயிற்சி, இப்படி நீண்டு கொண்டே போகும் பல்வேறு கலைகள் கற்று தருவது தன்னம்பிக்கையைதான்.

உன்னால் முடியும், முயன்றால் முடியும், முற்றும் செய்ய கற்றுக்கொள் என்று உபதேசம் செய்தால் தவறில்லை.

ஆனால் என்னால் முடியும் என்னால் மட்டும் முடியும் என்று சொல்ல முனைந்தால், அதை தன்னம்பிக்கை என்பதை விட, ஈகோ என்று தலையில் குட்டுகிற செயலும் அரங்கேறுகிறது.


அது ஒரு கிராமம்.
--------------------------

அந்த கிராமத்தில் குடியிருக்க சொந்த இடம் இல்லாத நூற்றுக்கணக்கான நபர்களுக்கு அரசாங்கம் இலவசமாக நிலத்தை பட்டா போட்டு கொடுத்தது. ஒரு நபருக்கு நாலு ஏக்கர்.

எல்லோரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போய் பார்த்தார்கள். அது உடனடியாக பயன்படுத்துவதற்கேற்ற நிலம் இல்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே அதில் வீடு கட்டவோ, விளைநிலமாகவோ மாற்ற முடியும்.

கூட்டத்தில் இருந்தவர்கள் கொதித்துப்போனார்கள். இந்த அரசாங்கம் நம்மை எல்லாம் வஞ்சித்து விட்டது.

அரைப்படி அரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம் என்கிற மாதிரி, பெரிய அறிவிப்பு விட்டு நிலத்தை தந்தார்களே தவிர முற்றிலும் ஏமாற்று வேலை.

நம் வாழ்நாள் முழுவதும் போராடினாலும், இந்த நிலத்தை சீற்படுத்தவோ, செப்பணிடவோ முடியாது.

அதனால் நம் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு உடனே சாலை மறியல் செய்ய வேண்டும் என்று கூட்டமாக, சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஆனால் என்பது வயது முதியவர் மட்டும் மண்வெட்டி, கோடாலி, கடப்பாரை, கத்தி சகிதம் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

வளர்ந்து கிடந்த முற்புதர்களை அழித்து, மேடு பள்ளங்களை சீர்படுத்தி, வளர்ந்து கிடந்த பாறைகளை உளி சுத்தியல் கொண்டு உடைக்க தொடங்கினார்.


இதை கவனித்த கிராமவாசிகள்... உனக்கு என்ன பைத்தியமா?

நாங்கள் எல்லாம் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வேறு நல்ல இடம் கேட்கும் போது, நீ ஒருவன் மட்டும் இங்கே வந்து விட்டாயே. உன்னால் இந்த பாறையை உடைத்து நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர் என்னால் முடியும் என்றார்.

உனக்கு புத்தி பிசகி விட்டதா? உனக்கு வயது என்பது. உன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இந்த இடத்தில் ஒரு வீடு கட்டவோ, விவசாயம் செய்யவோ முடியாது.

தெரிந்தும் ஏன் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி உன் சக்தியை வீணடிக்கிறாய் என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர், அது எனக்கும் தெரியும். இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை நான் துவக்கி வைக்கிறேன்.

எனக்கு உறுதுணையாக என் மகன் இருப்பான். அவனுக்கு பின்னால் என் பேரன் காலத்தில் இதில் வீடு கட்டவும், விவசாயம் செய்யவும் அருமையான இடம் கிடைத்துவிடும் என்றாராம்.

இந்த பெரியவர் சொன்னது தன்னம்பிக்கையா? தான் என்ற அகந்தையா? தன்னால் முடியும் நேற்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் தான் சாதிக்கிறார்கள்.


ஒரு விமானி விமானத்தை ஓட்டுகிறார் என்றால் அவர் பயிற்சி பெற்றதால் ஓட்டுகிறார். நீங்கள் பயிற்சி பெற்றால் ஓட்ட முடியாதா?

முடியும்.

முயன்றால் முயற்ச்சி செய், முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதுதானே வாழ்க்கை தத்துவம்.

அதனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்னால் முடியும் என்கிறிர்களா!

பலே..!

என்னால் மட்டும் முடியும் என்கிறீர்களா?

பலே...பலே...!

உங்கள் தன்னம்பிக்கையின் பலம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.


லட்சம் பேர் கூடிய சபையில் கூட சொல்வேன். நான் எபது அகந்தையின் அடையாளம் அல்ல. நான் என்பது உணர்தலின் வெளிப்பாடு.

நான் என்பது எதிர்மறை எண்ணங்களுக்கு கடிவாளம். நான் என்பது முயற்சியின் முகவரி. அதனால் நான் என்று சொல்லுங்கள்.

அப்படியானால் ஈகோ என்பது எது?
---------------------------------------------------

ஒப்பிட்டு பார்க்கும் குணம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தான் ஈகோ பிறக்கிறது.


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யோசிக்க முடிகிறதா? அப்போது தான் ஈகோ பிறக்கிறது.

நான் மெத்த படித்த மேதாவி. பட்டங்கள் பல பெற்றதால் எனக்கு கொம்பு முளைத்து விட்டது. எனக்கு இணையாக யாருமே இல்லை என்று நினைத்தால், படிக்காத நபர்களோடு நான் பழக மாட்டேன் என்று வட்டம் போட்டுக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால், அது ஈகோ அல்லது தலைக்கணம்.

அவர் படித்த முட்டாள்.

நான் பணபலம் பெற்றவன். அவன் ஏழை. என்னோடு சரிசமமாக அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நினைத்தால் அது ஈகோ மட்டும் அல்ல, அவர்தான் மாடி வீடு ஏழை.

பணம் என்பதும், பதவி என்பதும், இன்று வரும் நாளை போகும். வரும் போது சொல்லிக்கொண்டு வருவதில்லை. போகும் போது சொல்லிக்கொண்டு போவதும் இல்லை. இதுதான் உலக நியதி.........