மணக்கால் அய்யம்பேட்டை (திருப்பெருவேளூர் ) வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 6:45 PM | Best Blogger Tips

திண்தோள் மணிவண்ணன்!
மணமக்கள் பிணக்கு நீக்கிய பெருவேளூர் பெருமாள்!
கே. குமார சிவாச்சாரியார்


                         திருப்பெருவேளூர் என்று பகவானைப் பாடிப் பணிந்த பழந் தமிழ்ப் புலவர்கள் கால்பதித்த மணக்கால் அய்யம்பேட்டை ஓர் அதிசயத் தலம். காட்டூர்- அய்யம்பேட்டை எனப்படும் இவ்வூரின் நடுநாயகமாக ஒரு வைணவப் பெருந்தலம் நீண்ட காலமாக அருளாட்சி செய்து வருகிறது.

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து, சாஸ்திரங்களே உயிர் மூச்சென நினைத்து வாழ்ந்து வந்த அந்தணர்கள் தங்கள் குடும்பத்துடன் ஸ்ரீமந்நாராயணனைப் போற்றிப் பாடி வந்தனர். இதன் காரணமாக இவ்வூர் சதுர்வேதமங்கலம் ன்று புராதன காலத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் பெருமாளை சூரியதேவன் தனது ஒளியால் திருமஞ்சன நீராட்டைச் செய்வது காணக்கிடைக்கா காட்சி.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ண மங்கைக்கு வடக்கே சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த வைகுந்தவாசனின் தலம். ஸ்ரீவைகுந்தவாசப் பெருமாள் பூதேவி, நீளாதேவி சமேதராக சுமார் ஏழு அடி உயரத்தில் அபய, வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலத் துடன் சேவை சாதிக்கிறார். ஸ்ரீஆண்டாள் நாச்சியார், அனுமன் சந்நிதிகள் எதிரில் அமைந்திருக்க, திருமாலின் திருப்பார்வையில் கருடாழ்வாரும் சுதர்சன மூர்த்தியும் அருள்கின்றனர்.

"ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

நாராயண மகாக்ஞேயம்

விஸ்வாத்மானம் பராயணம்'


என்று வேதவித்துக்கள் மந்திரங்களைச் சொல்ல, தமிழ் மறை ஓதுவோர்,

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரத்தாண்டு- வல்லாண்ட

திண் தோள்கள் மணிவண்ணா'


என்று அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவை பாடிப் பரவ, கருவறையில் மூர்த்திகரத்தோடு அமர்ந்திருக்கும் ஸ்ரீவைகுந்தவாசனுக்குத் திருமஞ்சன நீராட்டு நடைபெறுவது கண்கொள்ளா காட்சி!

""எல்லாம் வல்ல எம்பெருமான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாய் 108 பதிகளில் சேவை சாதிக்கும்போது, வேதப் பிராமணர் களுடைய மந்திர ஒலி கேட்டு இத்தலத்தில் ஒரு நாள் தங்கினார். பூமி பிராட்டி தனது பதியைக் காணவில்லையே என்று தேடி வந்து இங்கே தங்கினார். திருமாலின் மார்பில் எப்போதும் உறைகின்ற திருமகளும் தேடிவந்து அவரோடு ஒரு பத்ம பீடத்திலே அமர்ந்து கொண் டாள். அந்த வேதப் பிரியனுக்கு உரிய தாகிய வேதவிமானக் கருவறை விமானம் (நான்கு பட்டை விமானம்) செய் வித்து பெருமாளை இங்கே எழுந்தருளப் பண்ணி இருக்கிறார்கள்'' என்றார் எஸ். இராமசாமி பட்டர்.

வைகுந்தத்தில் ஸ்ரீஎம் பெருமான் எப்படி நாச்சியா ரோடு ஆனந்தமயமாகக் காட்சி தருகிறாரோ அவ்வாறே அர்ச்சாவதாரியாய் பக்தகோடி களுக்குச் சேவை சாதிக்கிறார்.

நான்கு வீதிகள் மட்டும் இருந்த திருப்பெருவேளூரில் ஒருகாலத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த கணவர்- மனைவிக்கிடையே மனக்கிலேசம் உண்டாகிவிட, சிறிய கூரை மட்டுமே இருந்த இக்கோவில் வாசலில் வந்து படுத்துக் கொண்டான் கணவன். சிறிது நேரம் கழித்து அங்கே வந்த அவனது மாமனார், உறங்கிக் கொண்டிருந்த கோபக்கார மருமகனை சமாதானப் படுத்தி அழைத்துச் சென்று வீட்டில் விட்டு, ""இனிமேல் ஒற்றுமையாக இருங்கள்'' என்று சொல்லி, தோட்டத்திற்குச் சென்று வருவதாகப் போனவர் மீண்டும் வரவேயில்லை. கணவன்- மனைவி இருவரும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு நாள் அவனது மாமனார் ஊரிலிருந்து வந்தார். ""போன வாரம் எங்களை சமாதானப்படுத்தி விட்டு, தோட்டத் திற்குச் செல்வதாகப் போய்விட்டு வராமலே போனீர்களே...'' என்று கேட்டதற்கு, ""நானாவது சென்ற வாரம் வந்ததாவது... எனக்குப் பணிகள் அதிகமாக இருந்ததால் இன்றுதானே வருகிறேன்'' என்றார்.

""அப்படியென்றால் அன்றைக்கு எங்களை சாந்தப்படுத்தியவர் யார்?'' என்று அதிசயத்தோடு கேட்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஊர்ப் பெரியவர், ""உங்களைச் சாந்தப்படுத்தியது மேற்கே கோவிலுள் அமர்ந்துள்ள சங்கு சக்கர தாரியான வைகுந்தவாசன்தான்'' என்றார்.

எல்லாருக்குமே வியப்பு மேலிட, மறுநாள் வந்த சனிக்கிழமையன்று கோவிலுக்குச் சென்று பார்த்தபோது, அன்று வந்த முதியவர் வாசலில் படுத்திருந்தார். இவர்களைக் கண்டதும் வாழ்த்துரை வழங்கு வதுபோல கையை அசைத்து விட்டு கருவறைக்குள் சென்று விட்டார். பிரிந்த தம்பதியரைச் சேர்த்த பரந்தாமனின் கருணையை எண்ணி அனைவரும் வியந்தனர்.

ஆலய மகா மண்டபத் தில் ஒரு கிருஷ்ணர் சிலை இருக்கிறது. குழந்தை இல்லாத பெண்மணிகள் வழிபடச் சென்றால் இந்தச் சிலையை அரை மணி நேரம் மடியில் வைத்திருக்கத் தரு வார்கள். இப்படிச் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இத்தலம் சுக்கிர தோஷ நிவர்த்தி தலமாக உள்ளதால், மண வாழ்வில் சங்கட மிருந்தாலும் குழந் தைப்பேறு தடையானா லும் வெள்ளி, சனி, ஞாயிறு, ஏகாதசி தினங்களில் தரிசிப்பதால் விரும்பிய பலன் கிடைக்கும்.