திருமயம் ஸ்ரீ சத்யகிரீஸ்வரர்.
சுவாமியின் பெயர்:- ஸ்ரீ சத்யகிரீஸ்வரர்.
அம்பாளின் பெயர் :- ஸ்ரீ வேணுவனேஸ்வரி.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தீர்த்தம்:- சந்திர புஷ்கரணி. ஸ்தல விருக்ஷம்:- மூங்கில்.
சத்திய மகரிஷி பூஜை செய்த தலம். மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது. இந்த சிவாலயத்தை தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும். 1300 வருடங்களுக்கு முன்பு மகேந்திர பல்லவன் கட்டிய குடவரைக்கோயில் இதுவாகும்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் சமேத ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.
அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (அதாவது மூங்கில் காடாக) இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள்.
சத்திய கிரீஸ்வரர் அழகிய லிங்கரூபமாக காக்ஷி அளிக்கிறார். இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மிகத் தொன்மையான திருக்கோவில் புதுக்கோட்டையில் இருந்து (மதுரை செல்லும் நெடுஞ்சாலையில்) சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் தொன்மையான சக்தி வாய்ந்த புகழ் பெற்ற திருக்கோயில் இதுவாகும்.
சத்தியகிரீஸ்வரர் கோவிலில், மூலவர் லிங்க வடிவில் காக்ஷியளிக்கிறார். குடைவரைக் கோவிலான இதில் சிற்பங்கள் மிக அழகாக உள்ளன. துவாரபாலகர் சிற்பம் அழகுமிக்கவை.
மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவை முழுமையாக அழிந்துவிட்டன. கோவிலில் முதல் மண்டபத்தில் உமாபதீஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி அம்மன், பைரவர், நவக்கிரகங்கள் சன்னிதிகள் உள்ளன.
கோவிலில் வேணுவனேஸ்வரி அம்மன் சன்னிதியே உள்ளது. 'வேணுவனேஸ்வரி' என்பதற்கு 'மூங்கில் காட்டு அரசி' என பொருள்படும். ஒரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் காடு அதிகம் இருந்ததால், இயற்கை சூழலையொட்டி அம்மனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோவில் கி.பி. 8-9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து குகைக்கோவிலாகும். திருமயம் கோட்டைக்கு சுற்றுலா வருபவர்கள் சிவன், விஷ்ணு சன்னிதியில் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும் ஆன்மிக சுற்றுலா வருபவர்களின் பயணத்தில் இக்கோவிலும் இடம் பெறுகிறது.
சத்தியகிரீஸ்வரரை மனதார நினைத்தால் அவர்களது பாவங்கள் நீங்கும். தொழிலில் வெற்றி, திருமண தடை நீங்கும். குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
தீரர் ஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த ஊர் இந்த திருமயமாகும்.
பக்தர்கள் அனைவரும் அவசியம் இந்த திருக்கோவிலுக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ சத்யகிரீஸ்வரை வணங்கி இறையருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷