இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? வழிபடுவது எப்படி?
பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் அனைவரின் உள்ளம் கவர்ந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணன் என்றால் கறுப்பு நிறம் கொண்டவன் என்று பொருள். அப்படிக் கார்மேக வண்ணனாக கண்ணன் அவதரித்த தினத்தையே நாம் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். அஷ்டமி என்றால் 8வது நாள் என்று பொருள். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியே கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பெரும்பாலும் தெய்வங்களின் அவதார தினங்களைத் திதி கொண்டே வழிபடுவது வழக்கம். மாறாக சில வழிபாடுகள் நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைவதும் உண்டு.
அதேபோன்று கண்ணனின் அவதாரம் நிகழ்ந்த நட்சத்திரம் ரோகிணி. ஆவணி ரோகிணியும் அஷ்டமி திதியும் இணைந்த நாளிலேயே கண்ணன் அவதாரம் செய்தான். சிலர் ரோகிணி நட்சத்திரத்தின் அடிப்படையில் கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடுவார்கள். பெரும்பாலும் இந்த இரு தினங்களும் அடுத்தடுத்த நாள்களில் வருவது வழக்கம். சில ஆண்டுகள் ஒரே நாளிலும் வரும். வீடுகளில் கோகுலாஷ்டமியாகவும் ஆலயங்களில் கிருஷ்ண ஜயந்தியாகவும் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோகுலாஷ்டமி திங்கட்கிழமை ஆகஸ்ட் 26-ம் தேதி வருகிறது. திங்கட்கிழமை காலை 9.12 மணி வரை சப்தமி திதி. அதன் பிறகு அஷ்டமி திதி தொடங்குகிறது. அது மறுநாள் ஆகஸ்ட் 27 காலை 7.30 மணி வரை நீடிக்கிறது. எனவே 26 மாலை கோகுலாஷ்டமி கொண்டாடுவதே சிறப்பு. எப்போது இரவு அஷ்டமி இருக்கிறதோ அப்போதுதான் கொண்டாட வேண்டும் என்பது நியதி.
ரோகிணி நட்சத்திரத்தைப் பொறுத்தவரை 26-ம் தேதி திங்கள் இரவு 9.40 மணிக்குப் பிறகு தொடங்கி 27-ம் தேதி இரவு 8.54 வரை நீடிக்கிறது. எனவே கிருஷ்ண ஜயந்தி கொண்டாடும் வழக்கம் உடையவர்கள் 27-ம் தேதி கொண்டாடலாம்.
ஆனால் இரண்டும் இணைந்து வரும் வேளை 26-ம் தேதி இரவு இருக்கிறது. அதாவது 26-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் அஷ்டமியும் ரோகிணியும் இணைந்து காணப்படுகிறது. எனவே அந்த வேளையில் கோகுலாஷ்டமி கொண்டாடுவது மிகச்சிறப்பு.
இரவில் பூஜை செய்யலாமா?
பொதுவாக இரவு வேளையில் பூஜை செய்யும் வழக்கம் இல்லை. மாறாக மகாசிவராத்திரி நாளில் இரவு வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோன்று கிருஷ்ண ஜயந்தி நாளிலும் இரவு வழிபாடுகள் செய்யலாம் என்கின்றன ஞான நூல்கள். கிருஷ்ணன் அவதாரம் செய்தபோது நள்ளிரவு. எனவே மற்ற நேரங்கள் எல்லாவற்றையும்விட இரவு பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. இஸ்கான் போன்ற கிருஷ்ண பக்த அமைப்புகள் அந்த வேளையில்தான் கிருஷ்ணருக்கு மகா அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். முற்காலத்தில் நம் வீடுகளிலும் இரவில்தான் கோகுலாஷ்டமி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது. எனவே இந்த ஆண்டு வாய்ப்பிருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனை வழிபடுவது சிறப்பு. அவ்வாறு வழிபட இயலாதவர்கள் 26 மாலையில் பூஜை செய்து வழிபடலாம்
வழிபடுவது எப்படி?
கிருஷ்ணன் பிறப்பு என்பது நம் வீடுகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒரு திருவிழா. எனவே வீட்டை மலர்கள் மற்றும் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வீட்டின் வாசலில் கோலம் இட்டு, கோலத்தில் இருந்து கண்ணனின் பாதங்கள் போன்ற சின்னச் சின்னக் கால்களை பூஜை அறைவரை வரைய வேண்டும். பிறகு கிருஷ்ணைன் படம் அல்லது விக்ரகத்துக்கு, சந்தனம், குங்குமம் இட்டு மலர் சாத்தி அலங்கரிக்க வேண்டும். பிறகு கண்ணனின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஆலிலைக் கிருஷ்ணன் படமோ விக்ரகமோ வைத்து வழிபடுவது சிறப்பு
கிருஷ்ணருக்கு உகந்த நிவேதனம் எது?
மற்ற பண்டிகைகள் எல்லாம் விரதம் இருந்து கடைப்பிடிப்போம். ஆனால் கிருஷ்ண ஜயந்திக்கு சுவையான பலகாரங்கள் செய்து நிவேதனம் செய்து மகிழ்வோம். அதை பிரசாதமாக உட்கொள்வோம். முறுக்கு, சீடை, அதிரசம் ஆகியன செய்து படைக்கலாம். எத்தனை பட்சணங்கள் செய்தாலும் வெண்ணெய் வைக்க வேண்டியது அவசியம். பிற பட்சணங்கள் செய்ய வசதியில்லை என்றால்கூட சிறிது வெண்ணெய் சமர்ப்பித்தாலே போதும் கண்ணன் மனம் மகிழ்ந்து அருள்வான். செல்வ வளம் வேண்டுபவர்கள் தவறாமல் அவல் நிவேதனம் செய்ய வேண்டும். குசேலன் கண்ணனுக்கு அவல் காணிக்கையாக்கிக் குபேர சம்பத்துகளைப் பெற்றான்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோமே பக்த்யா ப்ரயச்ச தி
ததஹம் பக்தியுபஹ்ருதயம்
அச்னாமி ப்ரயதாத்மந :' என்கிறார் பகவான். அதாவது ஒரு துளசியோ, ஒரு மலரோ அல்லது இவை இரண்டும் கிடைக்காவிட்டால், ஒரு பழமோ சமர்ப்பித்தால் போதுமானது. அதுவும் இல்லை எனில் உள்ளன்போடு ஓர் உத்ரணி நீரை சமர்ப்பித்தால்கூட அதை ஏற்றுக்கொள்வேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர். எனவே நம் வசதிவாய்ப்புகள் அனைத்தையும் தாண்டி பக்தி இருந்தால் நாம் சமர்ப்பிக்கும் எதையும் பகவான் கிருஷ்ணர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு நல்லாசி வழங்குவார்.
வரும் கண்ணனின் அவதார தின நாள் பகவான் கிருஷ்ணனின் நாமத்தை ஜபம் செய்து நலன்களையும் வரங்களையும் ஒருங்கே பெறுவோம்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


