ஸ்வாஹா ; ஸ்வதா இந்த சொற்களின் விளக்கவுரை .
“ஸ்வாஹா” என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக
(“ஆஹூதி”யாக)இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சு என்பது நன்மையை குறிக்கும் ஆ என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.
ஸமிஸ்கிருத/ வடமொழியில் ‘ஸ்வாஹா’ என்பது பெண்பால் பெயராகும்.‘ஸ்வாஹா’ என்பது ஸ்வாஹா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார்.
யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
-ஸ்வாஹா' வுக்கு வேதாந்தப்பொருள்-
'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை;அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான். ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது.
வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத’பரம்பொருள்’ என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:
“ஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி; யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி; அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா”
இதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து அனைத்தும் தோன்றிற்றோ அந்த ஜோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற ஜோதியில் இடுகிறேன். ஸ்வாஹா.
மேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை. வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.
கந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது:
*யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலை நின்றது தற்பரமே.*