பிரதோஷ நேரத்தில் மூச்சு விடும் அதிசிய நந்தி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:16 | Best Blogger Tips

 


பிரதோஷ நேரத்தில் மூச்சு விடும் அதிசிய நந்தி

 

இது அமைந்துள்ள கோவில் ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோவில்

 


வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சிமண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம்.

 

இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்குமுன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது,

 

இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள்.

 


திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் ஆலயம் நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலமாக உள்ளது.

 

15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோவில் .

 

இங்கு கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட

பீடத்தில் உள்ள பிள்ளையார் சிற்பம் இரண்டு கைகளுடன் பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

 

வலக்கையில் தடி

போன்ற ஆயுதத்தையும் இடக்கையில் ஒடிந்த தந்தத்தையும் பற்றியுள்ளார்.

 

தலையில் கரண்டமகுடமும், மேற்கைகளில் கடகமும், முன்கைகளில் காப்பும், மார்பில் உபவீதமாக யக்ஞோபவிதமும், இடையில் ஆடையும், கால்களில் தண்டையும் அணிந்துள்ளார்.

 

தமிழகத்தில் உள்ள விநாயகா் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்

ஐரா மகாதேவன் தெரிவித்துள்ளார்.

 

இந்த சிற்பம் 75செ.மீ

உயரம் (29 அங்குலம்)  மற்றும் 40 செ.மீ (15 3/4 அங்குலம்) அகலம் கொண்ட நீளமான

ஒரே பலகைகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த பிள்ளையார் பீடத்தில்

3 வரிகளில் "பிரமிறை பன்னூற- சேவிக - மகன்- கிழார்- கோன்- கொடுவித்து" என்ற வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சிற்பத்தின் பீடத்தில் 3 வரிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் இந்த சிற்பம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

 

இக்கல்வெட்டு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று டாக்டர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.

 

இது சம்பந்தமாக முதன் முதலில், விழுப்புரத்தைச் சார்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கோவிலுக்கு வந்து சிலையை ஆய்வு செய்து சொல்ல. பின்பு தொல்லியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

 

அவர்கள் சிலையில் உள்ள வட்டெழுத்துக்களை பர்வையிட்ட பிறகு,

"இந்த எழுத்துக்களின் வடிவம் பூளாங்குறிச்சி என்ற எழுத்து வடிவத்துக்கு பிறகும், பிள்ளையார் பட்டி

குடைவரைக்கோயில் கல்லெழுத்துக்களின் வடிவத்துக்கு முந்தையதுமாக

உள்ளது என கூறிச் சென்றுள்ளனர்".

 

 

எனவே இந்த விநாயகர் வழிபாடு என்பது, கி.பி 4 ம் நூற்றாண்டு இறுதி காலத்திலும்,கி.பி 5 ம் நூற்றாண்டு தொடக்க காலத்திலும் ஆர்கராமூர் என்ற ஆலகிராமம் என்ற ஊரில் மூத்த பிள்ளையார் சிலையை நிறுவி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

 

தற்போது இந்த

விநாயகர்

சிலை,மூலவர் கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

 

பிள்ளையார் சிற்பத்துடன் லகுலீசர், இரண்டு பல்லவர் கால ஐயனார், ஜேஸ்டாதேவி 

சிற்பங்கள் இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காகத் திருப்பணிகள் மேற்கொண்டபோது பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

இக்கோயிலில் உள்ள சிவன் எமனுக்கு

தோஷம் நீக்கியதால் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார்.

 

இது எமனுக்கு தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும் சனீஸ்வரர் வணங்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

 

திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். 

 

மூலவர் விமானம்

சதுரஸ்ர வகையைச் சேர்ந்தது.

 

கருவறை பீடம் சதுரவடிவில் அமைந்துள்ளது.

 

கருவரையினுள்ளும் யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல ஓர் ஒலியை  மக்கள் கேட்டுள்ளார்கள்.

 

திருப்பணி வேலைகள் ஆரம்பித்து மூலவரை நகற்றிய போது

மூலவருக்கு கீழேயிருந்த ஒரு ஒளிப்பிழம்பு மேல் நோக்கி சென்றுள்ளதை படம் பிடித்து வைத்துள்ளர்கள்.

 

பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதை உணர முடிவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

 

பிரதோஷ காலங்களில் நந்தி சுவாசிப்பதை இங்கு உணரமுடிகிறது என்பது தனி சிறப்பு.

 

சுவாமி இடப்பக்கமும் அம்பாள் வலப்பக்கமும் மையமாக கடுவெளி சித்தர்சீடரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

 

படர்ந்து விரிந்த ஆலமரத்தின் கீழே

ஆண், பெண் நாக தேவதைகள் காட்சி தருகிறார்கள்.

 

மூலவர் கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகிய அங்கங்களைப் பெற்றுள்ளது.

 

தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார்.

 

இந்த அம்மன் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு வேறுபட்ட முகங்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்பு.

 

மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக்

காட்சி தருகிறார்.

 

சித்திரகுப்தனுக்கும் பிரகாரத்தில் சன்னதி உள்ளது.

 

நவக்கிரக சன்னதி இல்லாத சில கோவில்களில்

இதுவும் ஒன்று.

 

இக்கோவில் தீர்த்தக் குளத்தில் கங்காதேவி உறைவதாக நம்பப்படுகிறது.

 

யமன் இக்குளத்தில் மூழ்கி தன் பாவங்களைக் களைந்ததாக ஒரு புராணக்கதை உள்ளது. 

 

எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார்.

 

கங்கைசிலை தனியாக இருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு.

 

சஷ்டியப்த பூர்த்தி,

பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற நிறைவுநாள் விழாக்களையும் மிருத்யுஞ்சய ஹோமத்தையும் செய்வதற்கு இத்தலம் ஏற்றது.

 

இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

 

அம்பாள் கருணையையும் சுவாமியின் அருளையையும் பெறவேண்டி காஞ்சி மாமுனிவர் மகாபெரியவர் இந்த ஸ்தலத்தில் 1943, 1952, 1966, 1969, 1972 ஆம் ஆண்டுகளில் வருகை தந்து வழிபட்டுள்ளனர்

என்பது இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கும் கூடுதல் சிறப்பு.

 

தொகுப்புக்

கோவில் என்னும் வகைப்பாட்டில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை பரம்பரை அல்லாத அறங்காவலர் குழு நிர்வாகிக்கிறது.

 

ஒரு காலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடைபெறும் கோவில்களில்

இதுவும் ஒன்று.

 

கோவில் முகவரி:

 

திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர சுவாமி கோவில்

ஆலக்கிராமம்

மைலம் வட்டம்,

 விழுப்புரம் மாவட்டம்,

தமிழ்நாடு

பின் கோடு 604302 

 

கோயில் அமைவிடம்:

 

இவ்வூர் மைலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், ரெட்டணையிலிருந்து 5.6 கி.மீ. தொலைவிலும், கூட்டேரிப்பட்டு ரோடிலிருந்து 6.4 கி.மீ. தொலைவிலும், பெரமண்டூரிலிருந்து

10.3 கி.மீ. தொலைவிலும், திருவம்பட்டிலிருந்து 13.9 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 14.6 கி.மீ. தொலைவிலும், தீவனூரிலிருந்து 14.8 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 144 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது

 

கோவிலுக்கு செல்லும் வழி:

 

திண்டிவனம் to விழுப்புரம் வழியில் கூட்டேரிபட்டில் இறங்கி, மேற்கே மூன்று கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பேருந்து எண்-8,24 மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

 

நாமும் ஒருமுறை

இந்த பழமையான ஆலயத்திற்கு விஜயம் செய்து இறைவன் அருளைப் பெற்று வரலாமே!.



 நன்றி இணையம்