மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips
ஒரு குட்டி கதை - கடவுளை நம்பினோர் ...

மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!
*நம்பினோர் கைவிடப்படார்..*
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்..
குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்..
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது..
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்..
சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது..
கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்என்று கெஞ்சிக் கேட்டது..
நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாதுஎன்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்..
நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை ...
எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்என்றது குருவி..!
"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது
இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்..!
குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை..
போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்..
அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை..
ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்..
ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்..
யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்..
ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது..!
மனிதன் தானே..!
நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்..
ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்..!
பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,
அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இதுஎன்று மட்டும் சொன்னார் பகவான்..!
அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை..!
போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்..
அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்..!
தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்..
ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்..!
எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்..
அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன..
தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!
பகவானே! என்னை மன்னித்து விடு!
உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்..
அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!
அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்..
அவனை சரணடைவோம்.. மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு..
நம்புவோம்..
நிம்மதியாக வாழ்வோம்..



நன்றி இணையம்