நம்பிக்கை என்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 2:17 PM | Best Blogger Tips
நம்பிக்கை என்ற க்கான பட முடிவுநம்பிக்கை என்ற க்கான பட முடிவு


நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்க கூடாது.
ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றி முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.
நம்பிக்கைதான் ஆதாரம்
தொழிலாளி மீது முதலாளி வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அந்த நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த முதலாளி மீது தொழிலாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அவர்களை உண்மையாக, உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது.
கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பஸ்ஸில் போகிறோம் என்றால் அந்த டிரைவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அதில் பயணம் செய்கிறோம்.
இது பஸ்ஸுக்கு மட்டுமல்ல, விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.
நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.
உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஓட்டலுக்கு போகிறீர்கள். தோசை ஆர்டர் செய்கிறீர்கள். தோசை வந்தவுடன் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறீர்கள்.
இந்த சம்பவத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
அந்த ஓட்டலில் உங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்தவரை நீங்கள் முன்னே, பின்னே பார்த்தது கிடையாது. அதை உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்த சப்ளையருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த தோசையை நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாப்பிட்டீர்கள்.
நீங்கள் சாப்பிட்ட தோசையில் கெட்டது எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில் தானே அதை சாப்பிட்டீர்கள்? இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது?
முன்பின் பார்த்திராதவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எந்த வகையில் சேர்ப்பது?
நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

நன்றி பெ.சுகுமார்*