“அமைதியான கடல் ஒருபோதும் சிறந்த மாலுமியை உண்டாக்காது” என ஆங்கிலப்பழமொழி ஒன்று உண்டு. மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றிக்கும் முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கின்றன. ஆற்றின் ஓட்டத்தில் இறந்த மீன்கள் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் உயிருள்ள மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்துப் போராடும். உண்மையான வாழ்க்கை போராட்டம் நிறைந்ததே.
ஆனால் இன்றைய நவீன கால மனிதன் மறைந்த வாழ்வே வாழ துடிக்கிறான்.
தனிக் குடும்பம்
தனித் தொழில்
தனிப்பட்ட பிரச்சினைகள்
தனிமையான வாழ்வு என்று
தன்னையே தனிமைப்படுத்தி கொள்ள ஆசைப்படுகின்றான். ஏதோ ஒரு இருளின் நிழலில் தான் வாழ முயற்சி செய்கின்றான் .
இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை விட சோம்பல் மற்றும் சுயநலமுமே உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலும் யாரும் உறவுகளை பெரிதாக நினைப்பதில்லை, மதிப்பதில்லை. உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி வரும் சூழ்நிலை. இதை ரொம்ப பெருமையாக ‘மாடர்ன் லைப் ஸ்டைல்’னு சொல்லிக்கொள்கின்றோம். இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும், படிப்பு, பணம் சம்பாதித்தல் ஆகியவைகளே குறிக்கோள் என நினைத்து அவைகளிலே பெரும்பொழுது கழிந்துவிடுகிறது.
பொய்மையானது உண்மை எனும் முகமூடியை அணிந்து உலா வந்து கொண்டிருக்கிறது. பணமும், பதவியும்தான் உலகம், வேறெதுவும் தேவையில்லை என்று அநேக மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இதய உறவுகளை தொலைத்துவிட்டு, இணைய
உறவுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேண்டாம் ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம். அதில் இருந்து வெளியேறி, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வோடு இதயவழி நட்புக்கு மாறுவோம்!
✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*