*பொழுதுபோக்கு (Time-pass) Vs. பொழுதாக்கம் (Hobbies) - திரு.இறையன்பு
ஐ.ஏ.எஸ்.*
வாழ்க்கையை எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட, எவ்வளவு அடர்த்தியாக வாழ்கிறோம் எவ்வளவு செறிவாக நடந்து கொள்கிறோம் என்பவை முக்கியமானவை. யாரெல்லாம் பாடப் படிப்பையோ, பணியையோ மட்டுமே முழு வாழ்க்கையாகக் கருதுகிறார்களோ, அவர்கள் மனப்பிறழ்வு அடைவதற்கும், சோர்வில் சுருங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிலர் முக்கியமான பணிகளில் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அலுவலகமே உலகமாக இருந்திருக்கும். கோப்புகளைத்தாண்டி எதையும் வாசித்திருக்க மாட்டடார்கள். சக அலுவலர்களை தவிர, நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஒய்வு பெற்றதும் இது நாள் வரை பதவிக்காக பழகியவர்கள் பழக்கத்திற்கும் ஒய்வு தந்து விடுவார்கள். அவர்களுக்கு இழந்தவற்றை நினைத்து ஏக்கம் அடையவே நேரம் சரியாக இருக்கும்.
பணியை மட்டுமே கடிவாளம் போட்ட குதிரையாக செய்யாமல் பணிமுடிந்ததும் பொழுதாக்கங்களில் ஈடுபடுபவர்கள் பணியின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும் அயராமல் பணியாற்றுகிறார்கள். அவர்கள் மேசையில் கோப்புகள் தோப்புக்கரணம் போடுவதில்லை.
மணிக்கணக்கில் பேசினால் மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய தகவல்களை நிமிடங்களில் கிரகித்துக்கொள்கிறார்கள். பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல், கோபத்தை மறுநாளுக்கும் வரவு வைக்காமல் அப்போதே கடுமையாகக்காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.
இந்தப் பணியாளர்கள் பொழுதாக்கங்களில் ஈடுபடுவதால் அலுவலகத்தை தாண்டி நண்பர்களை பெறுகிறார்கள். யாரைப் பார்த்தாலும் பணியைப்பற்றி பேசி அவர்களை களைத்துப் போக வைக்கிற அலுவலர்களாக அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு பேசுவதற்கு பல செய்திகள் இருக்கின்றன.
சிலர் அலுவலகத்தை அலுவலகத்திலேயே விடத் தெரியாதவர்கள். அதை வீட்டுக்கு தூக்கிச்சென்று அங்கிருக்கும் அனைவரையும் படுத்தி எடுப்பார்கள். அந்த இம்சை அரசர்கள் தங்களை இல்லத்திலேயும் அதிகாரிகளாக நினைத்து மணியடித்து மனைவியை வரவழைப்பார்கள். இவர்களிடம் பேசினால் அவர்கள் சாதித்த ஐம்பது விஷயங்களை மூச்சுவிடாமல் பட்டியலிடுவார்கள். அவை அத்தனையும் துக்கடவாக இருக்கும்.
பணியிலிப்பவர்கள் பொழுதாக்கத்தை மேற்கொள்ளும் போது வாழ்க்கை சுவாரசியமாகிறது. அவர்கள் சார்ந்திருப்பதற்கு இன்னொரு தூண் ஏற்கனவே இருக்கிறது. அவர்கள் எதையும் இழந்ததாகக் கருதுவதில்லை. அவர்களுடைய மதிப்பு ஒரு போதும் குறைவதில்லை. சமயத்தில் பணி தராத திருப்தியை பொழுதாக்கம் தரும். சமூகம் அவர்களுடைய இன்னபிற ஆற்றல்களுக்காக வணங்கி நிற்கும்.
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
பொழுதுபோக்கு வேறு, பொழுதாக்கம் வேறு. பொழுது போக்குகளில் நாம் சாட்சிகள், பொழுதாக்கங்களில் நாம் பங்குதாரர்கள். பொழுதுபோக்கு (time-pass) நேரத்தை
போக்க, பொழுதாக்கம் (hobbies) நேரத்தை
ஆக்க.
பொழுதுபோக்கு முடிந்ததும் குற்ற உணர்வு ஏற்படும். பொழுதாக்கத்திற்கு முடிவு இல்லை. அதைச் செய்ய மகிழ்ச்சி அதிகரிக்கும். பயனுள்ள பொழுதாக்கங்கள் நிறையவே உள்ளன. (Books Reading, Drawing, Listening
Music, Travel, Watch Quality Cinema, Bird Watching, social working etc... etc..
)
பொதுதாக்கங்களில் இருப்பவர்கள் தோல்விகளில் துவண்டு போவதில்லை. அவர்கள் மகிழ்ச்சி என்னும் தென்றலை வரவேற்க ஆயிரம் சன்னல்களை அகலத் திறந்து வைத்திருந்திருக்கிறார்கள். ஒன்றில் வராவிட்டாலும் இன்னொன்றில் கட்டாயம் காற்று வரும், கமகமக்கும் நறுமணத்துடன். பொழுதோக்கங்கள் வைத்திருக்கும் நபர்கள் எப்போதும் புடை சூழ இருப்பார்கள். தனிமையில் தவிக்கிறவர்களே தவறான முடிவெடுக்கிறார்கள். பொதுதாக்கங்களில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருத்தப்படுவதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை.
எதையும் செய்யத் தெரியாதவர்களுக்கு தனிமை தண்டனை.
எதையும் செய்யத் தெரியாதவர்களுக்கு தனிமை தண்டனை.
பலவற்றை சிந்திக்க தெரிந்தவர்களுக்கும் பல ஆற்றல்களைக் கொண்டவர்களுக்கு தனிமை வரம். அவர்கள் அதை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
எழுதுகிறவர்களும், இசைக்கலைஞர்களும் படைப்பாக மனத்திறன் வேண்டுமென்பதற்காக தனிமை வேண்டி தவம் இருப்பதற்காகப் பயணம் செய்வதைப் பார்க்கலாம். அவர்கள் புதிய சூழலில் புளகாங்கிதம் அடைகிறார்கள். பொழுதாக்கம் கொண்டவர்கள் விரக்தியில் விழாமல் திருப்தியில் எழுதுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை தோல்விகளைச் சுண்டியெறியவும், ஆபத்துகளை எதிர்கொள்ளவும் சக்தி தருவதாக பொழுதாக்கம் (hobbies) விஸ்வரூபம் எடுக்கிறது".
படித்ததில் பிடித்தது.
எழுதியது உயர்திரு இறையன்பு ஐ.ஏ.எஸ்
எழுதியது உயர்திரு இறையன்பு ஐ.ஏ.எஸ்