திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993)
வாழ்க வளமுடன்!!
சூறாவளி கர்ஜனைக்கு பின், வாரியாரின் அமைதியான பேச்சு எடுபடுமா?
கடந்த 1985ல், “தினமலர்’ இதழின் இணைப்பாக, “சிறுவர் மலர்’ இதழ் வெளிவரத் துவங்கியது. மதுரையில் நடந்த துவக்க விழாவில், வாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு, “சிறுவர் மலர்’ இதழை வெளியிட்டு, சிறப்பு செய்தார். தலைமை வகித்த புலவர் கீரன், தனக்கே உரித்தான, “புயல்வேக’ பேச்சால் பார்வையாளர்களை திணறடித்தார்.
இந்த சூறாவளி கர்ஜனைக்கு பின், வாரியாரின் அமைதியான பேச்சு எடுபடுமா என்று, பலர் ஆர்வமுடன் எதிர்நோக்கினர். ஆனால், வாரியார், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார். “இன்று, “தினமலர்’ நாளிதழில் குழந்தைகளுக்கான, “நூல்’ வெளியீட்டு விழா. “நூல்’ என்பது, இரண்டு அர்த்தங்களை உடையது. ஒன்று, நாம் படிக்கக்கூடிய புத்தகத்தை குறிக்கும்; இன்னொன்று, நூல் கயிறைக் குறிக்கும்…
“ஒரு தச்சுத் தொழிலாளி, கோணலாக உள்ள மரத்தை அறுக்க, ஒரு நூல் கயிற்றில் சுண்ணாம்பு தடவி, அந்த நூலை இரு முனையிலும் இழுத்துப் பிடித்து, ஒரு சுண்டு சுண்டுவார். அந்த அடையாளத்தை வைத்து மரத்தை அறுப்பார். கோணல் நீங்கி, நேராகி, நமக்கு வேண்டிய அளவில் கிடைக்கும்…
“அதேபோல், நல்ல நூல் (புத்தகம்) படித்தால், நம் அறியாமை மற்றும் மனக்கோணல் நீங்கும். அந்த நூலின் பயன், இந்த நூலின் பயன்…’ என்று அமைதியாக, ஆனால், குழந்தைகளுக்கும் புரியும்படியாக பேசிய போது, பார்வையாளர்கள் கரகோஷம், அரங்கத்தையே அதிர வைத்தது.
– வாரமலர் @ தினமலர்