இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு (resonance) பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே கோட்பாடுதான் மந்திர சாதனையிலும் நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின் இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள் ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அதுதான் நடக்கிறது. மந்திரங்களை நாம் மூன்று வழி முறைகளில் உச்சரிக்கலாம்.
1) வாசிகம் – இது தெளிவான உச்சரிப்புடன் மற்றவர்களுக்கு கேட்கும் படி மந்திரத்தினை கூறுவது, இது வெளிமண்டலத்தில் குறித்த தெய்வசக்தியினை கவரும் முறை, ஆனால் எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர் பெறும் சக்தி குறைவு, ஆனால் சரியான சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச் செய்யலாம், பொதுவாக கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த முறையினையே பின்பற்றுகின்றனர்.
2) மானசீகம் – இதில் உதடு அசையாமல் மனதிற்குள் ஜெபிக்கும் முறை, மனதின் எண்ண அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில் தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது, ஆனால் மானசீகமாக இதனை நாம் செயற்படுத்தலாம்.
3) உபாம்சு – இந்த முறையில் உதடுகள் அசையும் ஆனால் அருகில் உள்ளவர்கள் கேட்க முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில் மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும். இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் செயல்படுவதாகும், இப்படி மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, ஏனென்றால் உபாம்சு முறையில் வாசிக ஜெபத்தில் உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ சக்தியினையே பரிவின் (resonance) மூலம் விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறை மூலம் உடலிற்கு உள்ளே உள்ள தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க முடியும். ஆனால் உபாம்சு முறை இரண்டுக்கும் இடைப்பட்டது, இது அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும் தன்மை உடையது. உபாம்சு முறையில் ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும் தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும் தெய்வ சக்தி செயற்படும். இதனால் ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர்.
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா முறைகளுமே சிறந்தவைதான் என்றாலும் ஜெபிப்பவர்களின் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் நாம் அவற்றை தேர்வு செய்ய வேண்டும், உலக பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்) முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம் சிறந்தது. நாடி வருபவர்களூக்கு காரியம் கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும், பொதுப்பூஜை செய்கிறோம் என்றால் வாசிக ஜெப முறை சிறந்தது. உலக கடமைகளையும் செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும் நன்மையினை பெற்று போகத்தினையும் யோகத்தினையும் தடையற பெறவேண்டும் என்றால் உபாம்சு முறை சிறந்தது.
மந்திரங்களை நாம் பல பகுதிகளாக பார்க்கலாம். அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Sources :
www.shanastrology.com/
www.swami-krishnananda.org
ScienceOfMantra.com