விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும்.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள்' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபாடி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு சுதந்திர போராட்டக்காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர். வெகுகாலத்தின் பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
நன்றி தினகரன் பேப்பர்