காஞ்சி பெரியவர்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips


ஒரு சன்னியாசி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்துவிட்டு, இன்றும் அரூபமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது பெரியவர்.

(கட்டுரையாளர்; இந்திரா சௌந்தர்ராஜன்.)
உதவி;தீபம் இதழ் & பால ஹனுமான்.

அந்த எப்படி வாழ வேண்டும் என்பதற்குள் பல நூறு விஷயங்கள் அடக்கம். அதில் ஒன்று, ஒரு சன்னியாசி ஒரு குடும்பஸ்தன் போலவோ இல்லை ஒரு வியாபாரி போலவோ ஒரு ஊரிலேயே தங்கி விடுவது என்பது. இப்படித் தங்கிவிடுவது, தங்கிஐயாய விதமாய் அங்கேயே சொத்துக்களை வாங்கிப் போட்டு அங்குள்ளோரோடு இணக்கமாய் இருந்துகொண்டு அதையே தனக்கான பாதுகாப்பாகவும் கருதுவதுதான் காலம் காலமாய் அறிவுடையோர் செயலாக உள்ளது.

இதனாலேயே ஒருவரைப் பற்றிக் கேட்கும்போது ‘உங்க சொந்த ஊர் எது?’ என்கிற ஒரு கேள்வியை நம்மையும் அறியாமல் கேட்பது வழக்கமாகி விட்டது. இந்த உலகில், எந்த ஊரும் உண்மையில் நமக்குச் சொந்தமில்லை. ஒருவேளை அசுர பண பலத்தால் ஒரு ஊரையே விலைகொடுத்து வாங்க முடிந்தாலும், ஆயுசு உள்ளவரைதான் இது எனக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள முடியும். கதை முடிந்துவிட்டால் யாராக இருந்தாலும் பாடியாகி, ‘பாடியை எப்ப எடுக்கப் போறாங்க?’ என்கிற கேள்விக்கு இலக்காக ஆவதுதான் காலம் காலமாக நாம் கண்டுவரும் யதார்த்தம். இருந்தாலும், வாழும் நாளில் என் சொந்த ஊர் என்று ஒரு ஊரையே நாம் சொல்லிக் கொள்வதை இந்த உலகம் அனுமதிக்கிறது. அதில் ஒரு தனித்த அடையாளமும் கிடைத்துவிடுகிறது. இதில் பல கித்தாப்புகள் வேறு.

‘நான் தாமிரபரணி தண்ணி குடிச்சு வளர்ந்தவன்... நான் மல்கோவா மாம்பழமாய் சாப்பிட்டு வளர்ந்தவன்...’ என்று கூறிக் கொள்வதெல்லாம் அடிஷனலான விஷயங்கள். இந்த சொந்த ஊர் உரிமை, கித்தாப்பு இதெல்லாம் சன்னியாசிக்குக் கிடையாது. கூடாதும் கூட! பெரியவர் இதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

சன்னியாசி என்பவர் ஒரு ஊரில் இத்தனை நாள் தான் தங்கியிருக்கலாம். அதற்குமேல் தங்கியிருந்து, அதன் காரணமாக அந்த ஊர்ப்பற்று கூட அவருக்கு ஏற்பட்டு விடுவது என்பது அவரது சன்னியாசத்துக்கு அழகு கிடையாதாம். இதனால், சன்னியாசி என்பவர் ஊர் ஊராகப் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் தன் காலாலே நடந்து... அப்படிப் போகும் போதுதான் ஒரு ஊர் சொந்தம் என்பது போய் நாடே சொந்தம் என்கிற எண்ணம் தோன்றி, அந்த நாடு நன்றாக இருப்பதற்காக. நாட்டிலுள்ள எல்லா உயிர்களும் நன்றாக இருப்பதற்காக இறைவனிடம் சுயநலமின்றி வேண்டிக் கொள்ள முடியும்.

இதை மனதில் கொண்டு, இந்த நாட்டில் அனேகமாக எல்லா ஊர்களுக்கும் போய் அங்கே தங்கி இருந்து தன் தவத்தைத் தொடர்ந்தவர் நம் பெரியவர் என்றால் அது மிகை கிடையாது. இப்படி நாடு முழுக்கப் பயணிக்கும் கட்டுப்பாடு உடையவருக்கு, இந்த நாட்டின் வரலாறு தெரிந்திருக்காவிட்டால் எப்படி? எனவேதான், பெரியவரின் சரித்திர ஞானம் குறித்தும் இங்கே சற்று சிந்திக்கும் ஒரு வாய்ப்பும், அதனால் பல பரவசங்களும் எனக்குள் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக பெரியவரின் சன்னியாச வாழ்வின் பல ஒளி மிகுந்த கட்டங்கள், குறிப்பாக என் மனதை நெகிழ்த்திய கட்டங்களையும் நான் இங்கே இப்போதே எண்ணிப் பார்த்து பகிர்ந்துகொண்டு விடுவதும் நல்லது என்று எனக்குப் படுகிறது. ஒரு ஊர் மட்டும் தனக்குச் சொந்தமில்லை என்று ஊர் ஊராகப் போய் உபதேசம் செய்தது ஒரு புறம்; இதற்கு நடுவே தனது காவிக்கும் ருத்ராட்சத்துக்கும் அவர் அளித்த மதிப்பு மரியாதை இருக்கிறதே! அதுதான் மிக உன்னதமான விஷயம்.

தனது யாத்திரையில் அவர் விஜய வாடாவில் தங்கி இருந்த சமயம் என்று கருதுகிறேன். அவரை தரிசனம் பண்ண கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வந்தார்கள். வந்தது மட்டுமல்ல; சாட்சாத் அந்த பரமேஸ்வரனே அவர் வடிவில் வந்திருப்பதால் அவருக்குப் பெரிய அளவில் மரியாதை செய்யவும் விரும்பினார்கள்.

இப்படிச் செய்ய விழைவது என்பது, ஒரு நாகரிகமான நன்றி காட்டும் செயல்பாடாகும். அப்படிச் செய்யப்படும் மரியாதையானது உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பதில் தவறிருக்க வாய்ப்பில்லை. விஜயவாடாக் காரர்களும் அப்படி நடந்து கொள்ள விரும்பி, தங்களுக்குள் வசூல் செய்து ஒரு தங்க கிரீடத்தையே செய்து பெரியவருக்கு அணிவிப்பது என்று தீர்மானித்து விட்டார்கள்.

ஊர் மக்கள் - தங்க கிரீடம் மட்டுமல்ல; நவரத்ன கிரீடம் கூட சூட்ட விரும்பலாம். ஏனென்றால், அது அவர்கள் பிரியத்தில் செய்யும் செயல். ஆனால் அதை, ஒரு ஊரைக்கூட தனக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் ஒரு சன்னியாசி ஏற்றுக் கொள்ளலாமா? அதிலும் தங்க கிரீடம் எனும் போது, அது ஒரு ராஜாவின் சிரசின் மேல் இருந்தால் பொருத்தமாக இருக்கும். கம்பீரமும் தரும். சன்னியாசிக்கு எதற்கு அது? மக்கள் எப்படி இதைச் செய்யலாம்? செய்தாலும் ஒரு சன்னியாசி ஏற்கலாமா? என்று சில கேள்விகள் இங்கே எழக்கூடும்.

எனக்கும் எழுந்தது. ஆனால், இதற்குப் பின்னாலே நுட்பமான பல சங்கதிகள் இருப்பதை நான் பல காலம் கழித்தே தெரிந்து கொண்டேன். தங்கம் என்பது, உலோகங்களில் அரசனைப் போன்றது. அதன் சிறப்பே, வளைந்து கொடுக்கும் அதன் தன்மை யோடு கூடிய துளியும் கருக்காத குணப்பாடு தான்! இல்லாவிட்டால், உலகின் பொதுவான பண மதிப்புக்குரியதாக அது ஆக முடியுமா என்ன? காலத்தாலும் தங்கத்தின் மதிப்பு ஏறிக் கொண்டேதான் போகிறது.

யோசித்துப் பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது. மரம் மட்டையில் இருந்து நாம் கட்டிய வீடு வாசல் வரை, காலம் செல்லச் செல்ல மதிப்பை இழக்கவே செய்கிறது. அதோடு பழைய என்கிற பதமும் சேர்ந்து கொண்டு அதன் தேயுமானத்தைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றன. ஆனால், மதிப்பு குறையாதபடி என்றும் ஏறுமுகமாக இருப்பது என்பது தங்கமும் நிலமும் மட்டும்தான்! அதனாலேயே இன்று பிரம்மாண்டமான தங்க நகைக் கடைகளும், ரியல் எஸ்டேட் புரிபவர்களும் அதிகரித்து விட்டார்கள். நஷ்டம் என்பதற்கு, எந்த நாளிலும் இடமே இல்லாத தொழில்கள்தான் இவை இரண்டும்!

இதில் கூட, இடத்தை விடவும் தங்கத்துக்கே மதிப்பு அதிகம். தங்கத்தை உலகம் முழுக்க சென்று செல்லுபடி ஆக்கலாம். இடத்தை அங்கே இருக்க விரும்புகின்றவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடி ஆக்க முடியும்.

சுற்றுச்சூழலில் ஒரு சாராயக் கடையோ சுடுகாடோ உருவாகி விட்டால், என்னதான் பூத்துக் குலுங்கும் இடமாக இருந்தாலும் அந்த இடம் தன் மதிப்பை இழந்து விடும். ஆனால், பிணத்தின் வாயில் இருக்கும் தங்கப்பல் கூட திருடப்பட்டு பயன்படுத்தப்படுவதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.

கருக்காத குணம், வளைந்து கொடுக்கும் தன்மைக்கு அப்படி ஒரு மதிப்பு! இதனாலேயே இப்படிப்பட்ட குணம் கொண்ட மனிதர்களைக்கூட ‘தங்கமான மனிதர்கள்’என்று கூறும் ஒரு வழக்கம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட தங்கத்தை, கோள்களில் குரு என்னும் கோளோடு சம்மந்தப்படுத்துகின்றனர்.

அதாவது, குருநாதரும் தங்கம் போல எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர். அவர் மதிப்பு ஒரு போதும் குறைவதேயில்லை என்பது இதன் நுட்பமான உட்பொருள். இப்படி மதிப்புமிக்க தங்கம் குருவாக மட்டுமல்ல; மகாலட்சுமியாகவும் பார்க்கப்படுகிறது. லட்சுமி, மாசற்ற அழகி. செல்வச் செழிப்பின் அடையாளம். இன்பங்களின் உறைவிடம்.

வாழப் பிறந்துவிட்ட மனிதர்களுக்கு இது எப்படி பிடிக்காமல் போகும்? அது மட்டுமா? வைணவ சித்தாந்தப்படி மகாலட்சுமி அந்த மகாவிஷ்ணுவின் மார்பில் இருக்கிறாள். விஷ்ணுவிடம் நாம் நல்வாழ்வுக்குப் பிரார்த்தனை செய்யும்போது அவன் மார்பிலிருந்து காது கொடுத்து கேட்டு, பின் விஷ்ணுவிடம் சொல்லி நம் குறைகளை நீக்குபவளே அவள்தான்.

எனவே, என்வசம் தங்கம் இருக்கிறது என்றால் மகாலட்சுமி இருக்கிறாள். அவள் இருப்பதால் மகாவிஷ்ணுவும் சேர்ந்தே இருக்கிறார். அந்த விஷ்ணுவின் வைகுண்டத்தை, என் பரிசுத்தமான வாழ்வாலும் தவத்தாலும் என்னால் அடைய முடிகிறதோ இல்லையோ, குண்டுமணி தங்கம் என்னிடம் இருக்கும்போது நான் அவரை அடைந்துவிட வழி ஏற்பட்டு விடுகிறது அல்லவா? பிள்ளையார் சிவ பார்வதியைச் சுற்றிவந்து உலகைச் சுற்றிவிட்டதாகச் சொன்னது போலவே ஒரு சுருக்கு வழி இது!

அடுத்து, இதே தங்கம் குருவாக இருந்து எனக்கு செய்தி சொல்லியபடியே இருக்கிறது. ‘என்னைப் போல என்றும் எப்போதும் மதிப்போடு இரு! அழுக்குக்கு இடம் கொடுத்து கருத்து விடாதே! அப்படி ஆனாலும் பாதகமில்லை. தீக்குளித்து உன் ஒளியை மீட்டுக்கொள். நீ தூய்மைக்காக தீக்குளிப்பாயானால், தீயும் உன்னை ஏதும் செய்யாது. சீதையை அதனால் ஏதாவது செய்ய முடிந்ததா? இங்கே ஏதாவது செய்ய முடிந்ததா? (இங்கே தீக்குளிப்பை சோதனையான கட்டங்களாகக் கருத வேண்டும்)

- இப்படி அது குருவாக இருந்து உபதேசித்தபடியே இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் இரண்டாயிரம் கடந்துவிட்டது என்று, அதை பணத்தின் மதிப்பில் பார்ப்பது அஞ்ஞானம். உலகையே இன்றும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அதன் குணப்பாட்டை, அது இப்படிச் சொல்லும் செய்திகளை எண்ணிப் பார்ப்பதே பெரும் ஞானம்!

இதனாலேயே புருஷன் பூட்டும் ஓலையான தாலம் என்னும் தாலி உள்ள இடத்தில் தங்கம் இருக்கட்டும் என்று அதை அனுமதித்தனர். புருஷபந்தம், உலக வாழ்வு, கற்பு நெறி எல்லாமே தங்கமாய் அதன் குணப்பாட்டைக் கொண்டிருக்கட்டும் என்றனர்.

கலிகாலக் கொடுமை - குணப்பாட்டில் பார்க்கப்பட வேண்டியது, பணப்பாட்டிலேயே பார்க்கப்பட்டு வருகிறது. இதனாலேயே ஒரு குடும்பப்பெண் கழுத்து, காது, மூக்கு எனும் ஐம்புல ஐங்குண உறுப்புகளில் தங்கத்தை அணிய வற்புறுத்தினர். கேட்கும் விஷயம் தங்கமாகட்டும். பார்ப்பது, உள்வாங்குவது, வெளிவிடுவது, மார்பில் தங்குவது, உடம்பைத் தாங்குவது என்று கால், கழுத்து முதல் தங்கம் தங்க அனுமதித்தனர். ஆணைவிட உயிர்களை உலகுக்குத் தரும் பெண்ணிடம் இதை கட்டாயமாகவும் ஆக்கினர்.

உயர்ந்த சர்வ விஷயங்களிலும் தங்கத்தைச் சேர்த்தனர். கோயில்களில் தங்க விமானம், இறை உருவங்களுக்கு தங்கக் கவசம் என்று அதன் மதிப்பை நிலை நிறுத்தினர். விரல்களில்கூட தங்க மோதிரம் அணியக் காரணம் என்ன தெரியுமா?

தங்கம் உள்ள கை, தப்பாக எதையும் செய்துவிடக் கூடாது. கையைப் பார்க்கும்போதே குருவும் மகாலட்சுமியும், கூடவே மகாவிஷ்ணுவும் நினைவுக்கு வந்து, மாதா பிதாவால் இந்த மண்ணுக்கு வந்த நாம், பின் குரு தெய்வத்தை கையிலேயே கொண்டிருக்கிறோம். இதனால் நாம் இருளுற்றவர்களுக்கு குருவாக இருப்போம், இல்லாதவர்களுக்கு லட்சுமியாக இருந்து உதவுவோம். அதனால் அவர்களைக் காப்பாற்றிய விஷ்ணுவாகவும் ஆகிவிடுகிறோம் என்பதே விரல்களில் மோதிரம் அணிவதின் உட்பொருள்.

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)