மைசூர் மசாலா தோசை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:46 | Best Blogger Tips
பெரும்பாலானோருக்கு தோசை மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். இத்தகைய தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் மசாலா தோசையைத் தான் அநேக மக்கள் விரும்புவர். அத்தகையவர்களுக்காக, மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். 
 
இந்த மசாலா தோசையை செய்வது என்பது மிகவும் எளிது மற்றும் சுவையானதும் கூட. சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மிளகாய் சட்னிக்கு...

சிவப்பு மிளகாய் - 4-5
வறுத்த கடலைப் பருப்பு - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பூண்டு - 2 பற்கள்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு, 6-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* 6-8 மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு நன்கு பிரட்டி, உப்பு சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

* அடுத்து, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் மாவை ஊற்றி தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி, நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும். இதேப் போன்று வேண்டிய அளவில் தோசைகளைச் சுட்டுக் கொள்ளலாம்.

* இப்போது மைசூர் தோசை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Thanks & Copy from Thatstamil.com