உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips
இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.

சரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!

பட்டை

இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.

கிராம்பு

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.

சீரகம்

பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.

கருப்பு ஏலக்காய்

கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்

குங்குமப்பூ

பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது

ஜாதிக்காய்

இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

மிளகு

அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பெருங்காயம்

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.